திடீரென ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின்! காரணம் என்ன?
ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடரின் நடுவில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு அறிவித்த காரணம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். 38-வயதான அவர் இந்த டெஸ்ட் போட்டி தான் என்னுடைய கடைசி போட்டி என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் என்றால் கூட ரசிகர்களுக்கு அந்த அளவுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்காது.
ஆனால், திடீரென இப்போது ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டி முடிந்த பிறகு இந்த அதிர்ச்சிகரமான அறிவிப்பை அஸ்வின் வெளியிட்டுள்ளார். இன்னும் ஓய்வு பெற்றது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவிக்கவில்லை. அவரது ஓய்வுக்கு முன், தலைமை பயிற்சியாளர் கம்பீர் அவருடன் நீண்ட நேரம் பேசினார், பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் தனது ஓய்வை அறிவித்தார். அதனைத்தொடர்ந்து அவருடைய ஓய்வு பற்றிய அறிவிப்பை இந்தியா கிரிக்கெட் நிர்வாகம் பிசிசிஐ அறிவித்துள்ளது.
திடீர் ஓய்வுக்கு காரணம் என்ன?
அஷ்வினின் ஓய்வு முடிவை சிலர் திடீரென வந்த அறிவிப்பு என்று கருதினாலும், அந்த முடிவு திடீரென எடுத்ததல்ல. அவர் தனது உடல் நலனையும், அணிக்கான பங்களிப்பையும் புரிந்துகொண்டு இப்படியான முடிவை எடுத்திருக்கிறார். ஏனென்றால், அவருக்கு முழங்காலில் பிரச்சினை இருப்பதன் காரணமாக வெளிநாட்டு தொடர்களில் சரியான பங்களிப்பை கொடுக்கமுடியவில்லை.
எனவே,இதன் காரணமாக தான் இந்த முடிவை அஸ்வின் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஓய்வு பெறவேண்டும் என்பதை அவர் 18 மாதங்களுக்கு முன்பே யோசித்து வைத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தான் அவருடைய ஓய்வுகாண காரணம் எனவும் சொல்லப்படுகிறது. உண்மையில் இதுதான் காரணமா? என்பது பற்றி அஸ்வினும் விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய விவரம்
மேலும், இது வரை இந்திய அணிக்காக மொத்தம் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேசப் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். சர்வதேச வீரர்கள் பட்டியலில் 7 ஆவது இடத்திலும் உள்ளார். அதைப்போல, டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 6 சதங்கள் உள்பட 3,506 ரன்கள் குவித்துள்ளார்.
மேலும், 116 ஒரு நாள் போட்டிகள் விளையாடிய அஸ்வின் 63 இன்னிங்ஸ் பேட்டிங் செய்து 707 ரன்கள் எடுத்துள்ளார். அதே சமயம் 156 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதைப்போல 65 டி20 போட்டிகள் விளையாடிய அவர் 72 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா?
அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்து மட்டுமே அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகளில் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை அவரை சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ள காரணத்தால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது,