ஒரு கேப்டனாக பாடம் கற்றுக்கொண்ட ரஷீத் கான்… தாக்கத்தை ஏற்படுத்திய அமெரிக்க இணைய தொடர்.!
மும்பை கேப் டவுன் அணியின் கேப்டன் ரஷீத் கான் சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தொடரான ப்ரிசன் பிரேக்கிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதாக கூறியிருக்கிறார்.
![prison break rashid khan](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/prison-break-rashid-khan.webp)
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும் அமெரிக்க இணைய தொடரான (Prison Break) ப்ரிசன் பிரேக்கைப் பார்த்து விட்டு, போட்டியின்போது எப்படி திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்பதனை கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
2025-ன் SA20-இன் மூன்றாவது சீசன் தற்பொழுது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. மும்பை கேப் டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகளுக்கு இடையிலான SA20 இறுதிப் போட்டி இன்று ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள தி வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
முதல் இரண்டு தொடர்களை வென்ற பிறகு, சன்ரைசர்ஸ் தொடர்ந்து மூன்றாவது பட்டத்தை வெல்லும் நோக்கில் இன்று களமிறங்குகிறது. அதே நேரத்தில் மும்பை கேப் டவுன் முதல் முறையாக இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது. இந்த இரு அணிகளும் அபாரமான ஃபார்மில் உள்ளன.
இன்றைய இறுதி போட்டியில் கேப் டவுன் அணி வெற்றி பெற முடிந்தால், அதற்கான பெருமை ப்ரிசன் பிரேக் இணைய தொடரில் வரும் கதாபாத்திரங்களான மைக்கேல் ஸ்கோஃபீல்ட் மற்றும் லிங்கன் பர்ரோஸ் ஆகியோருக்கு சேர வேண்டும் என்று ரஷீத் கூறியிருக்கிறார்.
இறுதிப் போட்டிக்கு முன்னதாக இது குறித்து ஊடகம் ஒன்றில் பேசிய ரஷீத் கான், ” நான் தற்போது PRISON BREAK இணைய தொடரை பார்த்து வருகிறேன். போட்டி நேரங்களில் சவாலான சூழல்களில் இருந்து எப்படி மீண்டு வருவது என அதிலிருந்து கற்று வருகிறேன். சிரமங்களிலிருந்து எப்படி மீள்வது என்பது குறித்த ஒரு யோசனையை இந்தத் தொடர் வழங்குகிறது.
இது கிரிக்கெட் விளையாடுவதற்கு உங்களுக்கு சில யோசனைகளைத் தருகிறது. ஒரு கேப்டனாக சில நேரங்களில் திட்டங்களை மறக்க நேரிடுகிறது. அதனால், தோன்றும் விஷயங்களை கையில் எழுதி வைத்து அடுத்தடுத்த ஓவர்களில் பயன்படுத்துவேன்” என்று SA20 அரையிறுதி – இறுதிப்போட்டி இடையே இருந்த இடைவெளியில் என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கு கேப்டன் ரஷித் கான் இவ்வாறு பதிலளித்துள்ளார்.