எங்க கிட்ட ரஷீத் இருக்காரு..கவலை கொஞ்சம் கூட இல்லை..ஆப்கானிஸ்தான் வீரர் அதிரடி பேச்சு!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடுகிறோம் என்பதால் என்ன ஆகப்போகிறதோ என கவலைப்படவோ, அதிகமாக யோசிக்கவோ எதுவும் இல்லை என ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சத்ரான் கூறியுள்ளார்.

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று (பிப்ரவரி 21)-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் கராச்சி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா போன்ற பெரிய அணியை எதிர்கொள்வது எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சத்ரான் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” நாங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கராச்சியில் உள்ள மைதானத்தில் விளையாடப் போகிறோம். நான் மிகவும் இந்த போட்டிக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். ஆனால், மற்றபடி என்ன ஆகப்போகிறதோ என கவலைப்படவோ, அதிகமாக யோசிக்கவோ எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன். எங்களுடைய களத்தில் நாங்கள் எவ்வளவு சிறப்பாக விளையாடுவோமோ அதே போல தான் வெளி இடங்களிலும் விளையாடுவோம்.
எனவே, அதே மனநிலையுடன் இந்த போட்டியிலும் விளையாடினோம் என்றால் நிச்சயமாக நம்மளுடைய பக்கம் நாம் எதிர்பார்க்கும் முடிவு வரும். நாம் சீக்கிரமே முடிவில் கவனம் செலுத்தத் தொடங்கினால், அழுத்தம் நம் மீது உருவாகும். எனவே, எப்படி எப்படி விளையாடினாள் சரியாக இருக்கும் என்பதை முன்பே திட்டமிட்டு விளையாடுவது சிறப்பான ஒன்று. நாங்கள் மிகச் சிறப்பாக செயல்படுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சமீபத்தில் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நாங்கள் விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 50 ஓவர் தொடரைப் பார்த்தால் கண்டிப்பாக புரியும்.
கடந்த 3 வருடங்களாக நீங்கள் எடுத்து பார்த்தால் எங்களுடைய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எங்களுடைய அணியில் பக்க பலமாக ரஷீத் கான் இருக்கிறார். அவர் எப்போது வேண்டுமானாலும் ஒரு போட்டியை மாற்றக்கூடிய அளவுக்கு திறமையை கொண்டவர். பந்துவீச்சில் மட்டுமில்லை பேட்டிங்கிலும் அவர் அதிரடியாக ஆடக்கூடிய ஒரு வீரர்.
அவர் நல்ல ஃபார்மிலும் முழு நம்பிக்கையுடனும் இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபியில் அவர் ஆட்டத்தையே மாற்றும் வீரராக இருப்பார்” எனவும் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சத்ரான் தெரிவித்துள்ளார். இவர் பேசியதை வைத்து பார்க்கையில், இந்த போட்டியில் வெல்ல அவர் உறுதியாக இருப்பதும் தெரியவந்துள்ளது.