ரஞ்சிக் கோப்பை: காலிறுதியில் தமிழ்நாடு அணி வெற்றி: 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேற்றம்
ரஞ்சிக் கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்று 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் காலிறுதி போட்டியில் செளராஷ்டிரா அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி களமிறங்கியது.
இதில் முதலில் பேட்டிங் ஆடிய செளராஷ்டிரா அணி, தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோரின் அபார பந்துவீச்சில் சிக்கி 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று 3வது நாள் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இதன் மூலம் அந்த அணி 155 ரன்கள் முன்னிலை பெற்றது.
Read More – #NZvsAUS : 100வது வெற்றியுடன் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி .!
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய செளராஷ்டிரா அணி தரப்பில் ஹர்விக் தேசாய் – கெவின் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதில் ஹர்விக் தேசாய் 4 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த நட்சத்திர வீரர் ஷெல்டன் ஜாக்சன் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து செளராஷ்டிரா அணி 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக பவுலிங் செய்த சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் தமிழ்நாடு அணி 33 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்ததோடு 7 ஆண்டுகளுக்கு பின் ரஞ்சிக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது.