கே.எல் ராகுல், நிக்கோலஸ் பூரன் அரைசதம் வீணானது.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
RRvLSG: லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இன்றைய முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியும், லக்னோ அணியும் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் இறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்தனர். லக்னோ அணியில் நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டையும், ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
இந்த போட்டியில் கேப்டன் சஞ்சு சாம்சன் 6 சிக்ஸர், 3 பவுண்டரி உட்பட 82* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். அதேபோல ரியான் பராக் 29 பந்தில் 43 ரன்கள் எடுத்தார். லக்னோ அணி 194 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், ராகுல் களமிறங்கினர். குயின்டன் டி காக் முதல் ஓவரிலே 4 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த ஆயுஷ் படோனி 1 ரன்னும், படிக்கல் டக் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் லக்னோ அணி 4 ஓவரில் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்து அடுத்தடுத்து 3 விக்கெட்டை பறிகொடுத்தனர். இருப்பினும் மத்தியில் இறங்கிய தீபக் ஹூடா வந்த வேகத்தில் அதிரடியாக விளையாடி தலா 2 சிக்ஸர், பவுண்டரி உட்பட 26 ரன்கள் எடுத்தார். பின்னர் நிக்கோலஸ் பூரன் , கேப்டன் கே.எல் ராகுல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து வந்த கே.எல் ராகுல் 17 -வது ஓவரில் சந்தீப் சர்மா வீசிய பந்தை சிக்ஸர் அடிக்க முயன்றபோது துருவ் ஜூரலிடம் கேட்ச் கொடுத்து 58 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இவர்கள் கூட்டணியில் 85 ரன்கள் குவித்தனர். மறுபுறம் சிறப்பாக ஆடி வந்த நிக்கோலஸ் பூரன் தனது 30-வது பந்தில் அரைசதம் விளாசினார்.
கடைசியில் இறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 3 ரன்கள் மட்டுமே எடுக்க இறுதியாக லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கடைசிவரை களத்தில் நிக்கோலஸ் பூரன் 64* ரன்களுடன் இருந்தார். ராஜஸ்தான் அணியில் டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டையும், நந்த்ரே பர்கர், ரவிச்சந்திரன் அஷ்வின், சாஹல், சந்தீப் சர்மா தலா 1 விக்கெட்டை பறித்தனர்.