டெல்லியை அடித்து நொறுக்கி முதல் வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் ..!
ராஜஸ்தான் அணி 19.4 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 150 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், டெல்லி அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, இறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர்.டெல்லி அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 51 ரன் எடுத்தார். 148 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரராக பட்லர், மனன் வோரா இருவரும் களமிறங்கினர். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே இருவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
பட்லர் 2, மனன் வோரா 9 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் 4, சிவம் துபே 2 ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். 36 ரன்னில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டை பறிகொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இதையடுத்து இறங்கிய டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து 62 ரன்கள் எடுத்தார்.
மத்தியில் இறங்கிய ராகுல் டெவெட்டியா 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற கடைசியில் இறங்கிய கிறிஸ் மோரிஸ் கடைசி இரண்டு ஓவரில் 4 சிக்சர்கள் விளாசி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ராஜஸ்தான் அணியை வெற்றி பெறச் செய்தார்.
கிறிஸ் மோரிஸ் 36* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். இறுதியாக ராஜஸ்தான் அணி 19.4 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 150 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
இதுவரை இந்த இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ராஜஸ்தான் அணியும், டெல்லி அணியும் தலா போட்டியில் தோல்வியையும், தலா 1 போட்டியில் வெற்றியையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.