ஐசிசி சிறந்த வீரர்களுக்கான விருதை தட்டி சென்ற ரச்சின் ரவீந்திரா, ஹேலி மேத்யூஸ்..!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து வருகிறது. அக்டோபர் மாதத்திற்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்வதற்காக  ஐசிசி நடத்திய கருத்துக்கணிப்பில் தலா 3 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு பெயர்கள் அறிவிக்கப்பட்டது. அந்த கருத்து கணிப்பில்  அணிகள் பிரிவில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா,  தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் குயின்டன் டி காக், மற்றும் நியூசிலாந்தின் இளம் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதேநேரத்தில் பெண்கள் பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஹெய்லி மேத்யூஸ், நியூசிலாந்து ஆல்ரவுண்டர் அமெலியா கெர் மற்றும் வங்கதேச சுழற்பந்து வீச்சாளர் நஹிதா அக்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது வென்றவர்களின் பெயரை ஐசிசி அறிவித்துள்ளது.அதன்படி சிறந்த வீரருக்கான  விருதை நியூசிலாந்து தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திராவும், சிறந்த வீராங்கனைக்கான விருதை வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஹேலி மேத்யூஸ் வென்றுள்ளனர்.

இதன் மூலம் இந்த விருதுக்காக போட்டியிட்ட ஜஸ்பிரித் பும்ரா,  குயின்டன் டி காக், அமெலியா கெர் மற்றும்  நஹிதா அக்தர் ஆகியோர் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து ரச்சின் ரவீந்திரா கூறுகையில், “ஐசிசி விருதை வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மாதம் எனக்கும், அணிக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தியாவில் உலக கோப்பை விளையாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது” என கூறினார்.

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் வரலாற்று சாதனையை முறியடித்த ரச்சின்..!

23 வயதான ரவீந்திரா உலகக்கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 123 ரன்களை எடுத்தார். பின்னர்  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 116 ரன்களை பதிவு செய்தபோது மற்றொரு சதத்தை விளாசினார்.  உலகக் கோப்பையில் நியூசிலாந்தின் முதல் ஆறு போட்டிகள் மூலம் ரவீந்திரா 406 ரன்களைக் குவித்தார். தற்போது ரவீந்திரா 565 ரன்கள் எடுத்துள்ளார். இதனால்  நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.  உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் இவர்  இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனைகளை முறியடித்து வருகிறார்.

மேலும், உலகக்கோப்பையில் 50 பிளஸ் 5 முறை அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை ரச்சின் படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து அபார வெற்றி மூலம் நான்காவது அணியாக அரையிறுதி வாய்ப்பை நெருங்கியது.  2019-ம் ஆண்டு உலகக்கோப்பையில் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியை தழுவியது.

அரையிறுதிக்கு  4-வது அணியாக நியூசிலாந்து வந்தால் வரும் நவம்பர் 15-ம் தேதி முதல் அரையிறுதியில் இந்திய அணியுடன் நியூசிலாந்து அணி மோதும். அப்படி விளையாடினால் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையில் அரையிறுதி போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி பழிவாங்கும்  என ரசிகர்கள் எதிர்பார்க்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்