முதல்ல சீக்கிரம் தூங்குங்க…பார்முக்கு வாங்க! பிரித்வி ஷாவுக்கு அட்வைஸ் கொடுத்த பஞ்சாப் வீரர்!
உடற்பயிற்சிகளை மேற்கொண்டு பழையபடி பிரித்வி ஷா கிரிக்கெட் விளையாட வரவேண்டும் என பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷஷாங்க் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க இப்போ உங்களுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற கேள்வியை இளம் வீரரான பிரித்வி ஷாவை பார்த்து ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ஏனென்றால், அவருடைய உடல் எடை அதிகமான காரணத்தால் அவருக்கு ஆரம்ப காலங்களை போல இப்போது முக்கிய போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ரஞ்சி டிராபி போட்டிகளுக்கான மும்பை அணியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கம் செய்யப்பட்டார்.
அவருடைய பேட்டிங் பார்ம் கவலைக்குரிய வகையில் உள்ளது. அதைப்போல, பிரித்வி ஷா உடல் எடையும் வயதை மீறிய அளவுக்கு உள்ளதால் அவரால் சரியாக ஓடி ரன்கள் எடுக்க முடியாமல் இருப்பதால் தான் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்கிற விமர்சனங்களும் எழுந்துகொண்டு இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளின் ஏலத்தின் போது 75 லட்சம் தான் அவருடைய ஆரம்ப விலை என்றாலும் கூட யாரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. இது அவருடைய ரசிகர்களுக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷஷாங்க் சிங் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசும்போது பிரித்வி ஷா மீண்டும் பழையபடி வருவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” யஷஸ்வி ஜெய்ஷ்வாலை போலவே பிருத்வி ஷாவும் சிறந்த ஒரு கிரிக்கெட் வீரர். இப்போது அவருக்கு கடினமான ஒரு காலமாக இருந்தாலும் கூட அவர் முன்னதாக செய்த விஷயங்களை நினைத்து நாம் அவருக்கு ஆறுதல் கொடுக்கவேண்டும்.
அதனைவிட்டு விட்டு அவரை குறைத்து மதிப்பிடவே கூடாது. அவரை குறைத்து சிலர் மதிப்பிடுகிறார்கள். அவர் திரும்பி பார்முக்கு வந்தார் என்றால் நிச்சயமாக அவர் மீது வைக்கபட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பார். பிரித்வி ஷா சில விஷயங்களை தன்னுடைய கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறார். நான் அவரிடம் சொல்லிக்கொள்ளும் விஷயம் என்னவென்றால், அவர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி திரும்பி வருவதற்கான முயற்சியை எடுக்கவேண்டும்.
கிரிக்கெட்டுக்காக சில நெறிமுறைகள் இருக்கிறது. எனவே, அதனை சரியாக பின்பற்றி ஒழுக்கமாக பழையபடி விளையாடவேண்டும். எனக்கு அவரை பல வருடங்களாக தெரியும். எனவே, ஒரு நண்பனாக சொல்கிறேன். அவர் மீண்டும் உடற்பயிற்சி மேற்கொண்டு விளையாட வரவேண்டும். சீக்கிரம் 10 மணிக்கு தூங்கவேண்டும். தூங்கி எழுந்த பிறகு காலையில் உடற்பயிற்சி செய்யவேண்டும். ஒரு வேலை அவர் இதனை செய்துகொண்டு கூட இருக்கலாம். இருப்பினும் என்னை பொறுத்தவரை அவர் மீண்டு வரவேண்டும் என்பது தான் கருத்து ” எனவும் ஷஷாங்க் சிங் தெரிவித்துள்ளார்.