சரவெடியாக வெடித்த பிருத்வி ஷா, தவான் .., டெல்லி அபார வெற்றி..!
டெல்லி அணி 16.3 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 156 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இன்று ஐபிஎல் தொடரின் 25- வது லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி- கொல்கத்தா அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சை தேர்வு செய்தனர்.
முதலில் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக ரசல் 45* , சுப்மன் கில் 43 ரன்கள் எடுத்தனர். 155 ரன்கள் இலக்குடன் டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே அதிரடியான ஆட்டத்தை டெல்லி வெளிப்படுத்த தொடங்கியது.
காரணம் பிருத்வி ஷா முதல் ஓவரிலே 6 பந்திற்கு 6 பவுண்டரி விளாசினார். இதனால், 18 பந்தில் பிருத்வி ஷா அரைசதம் விளாசினார். இவர்களின் விக்கெட்டை பறிக்க முடியாமல் கொல்கத்தா அணி பந்து வீச்சாளர்கள் திணறினர். இந்நிலையில் பாட் கம்மின்ஸ் ஷிகர் தவான் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் ஷிகர் தவான் 46 ரன்னில் வெளியேறினார். பிருத்வி ஷா, ஷிகர் தவான் இவர்கள் இருவரின் கூட்டணியில் 132 ரன்கள் சேர்த்தனர்.
பின்னர், ரிஷாப் பண்ட் களமிறங்கினர். அதிரடியாக விளையாடி வந்த பிருத்வி ஷா 41 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்சர் விளாசி 82 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக டெல்லி அணி 16.3 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 156 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். மேலும் புள்ளி பட்டியலில் டெல்லி 2-வது இடத்தில் டெல்லி உள்ளது.
இதுவரை டெல்லி மற்றும் கொல்கத்தா அணி தலா 7 போட்டிகளில் விளையாடி உள்ளனர். இதில் டெல்லி அணி ஐந்து போட்டிகளில் வெற்றியும், 2 போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. கொல்கத்தா அணி இரண்டு போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது.