சென்னை அணிக்கு திரும்பிய யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் பத்திரனா..!
Pathirana சமீபத்தில் பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது சென்னை அணியின் பத்திரனாவிற்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டது. அதனால், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் அவரால் விளையாட முடியவில்லை. மேலும் அவர் ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியானது.
இதற்கிடையில் நேற்று ஐபிஎல் 2024 இன் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டிக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு நல்ல செய்தி வந்தது. அது என்னவென்றால் சென்னை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பத்திரனா இந்த லீக்கில் விளையாட தயாராகி விட்டதாக அவரது மேலாளர் தெரிவித்தார்.
அத்தகைய சூழ்நிலையில் பத்திரனா விரைவில் அணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சிஎஸ்கே அணி வீரர் பத்திரனா சென்னை புறப்பட்டார். இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். இதை பார்த்த சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
காயம் காரணமாக பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பத்திரனா விளையாடவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சிஎஸ்கே அணி ஐபிஎல் 2023 பட்டத்தை வென்றது. இந்த பட்டத்தை பெறுவதில் பத்திரனா முக்கிய பங்கு வகித்தார். கடந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் 2022 இல் ஆடம் மில்னேவுக்கு மாற்றாக பத்திரனாவை சென்னை அணியில் சேர்த்தது. சென்னை அணியில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பத்திரனா என்பது குறிப்பிடத்தக்கது.