உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நடுவே பறந்த பாலஸ்தீன கொடி.! 4 பேர் உடனடி கைது.!
ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தாண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) நடத்தி வருகிறது. நேற்றைய உலக கோப்பை லீக் தொடரில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியானது கொல்கத்தாவில் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தின் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்று இருந்தது.
இந்த போட்டியானது ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று கொண்டிருந்த வேளையில், சில இளைஞர்கள் பாலாஸ்தீன நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் அந்நாட்டு கொடியை பிடித்தபடி இருந்துள்ளனர். இதனை தொடர்ந்து, உடனடியாக பார்வையாளர்கள் இருக்கைக்கு வந்த காவலர்கள் பலஸ்தீன கொடிகள் வைத்து இருந்த 4 பேரை கைது செய்தனர்.
அகதிகள் முகாமில் வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்..! 50 பேர் பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு.!
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கொடியை வைத்து புகைப்படம் மட்டுமே எடுத்து இருந்தனர் என்றும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோஷங்கள் எதுவும் எழுப்பவில்லை என்றும் கொல்கத்தா காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கேட் 6 மற்றும் பிளாக் ஜி1 என வெவ்வேறு பகுதிகளில் பாலஸ்தீன கொடிகளை காட்டியவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை மைதானத்தில் இருந்து வெளியேற்றினோம் என்றும், அவர்கள் எந்த கோஷத்தையும் எழுப்பாததால் பதற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றும் கொல்கத்தா போலீசார் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் 26 நாட்களாக தொடர்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரின் காரணமாக அதிக அளவில் உயிர்சேதம், பொருட்சேதம் என பாதிக்கப்பட்டு இருப்பது காசா நகரில் இருக்கும் பாலஸ்தீன மக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.