PAKvNZ : முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி வெற்றிபெற்றது.

கராச்சி : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி எதிர்கொண்டு விளையாடியது. கராச்சி மைதானத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அனியின் தொடக்க வீரர் வில் யங் 107 ரன்கள் விளாசி, சாம்பியன்ஸ் டிராபி 2025-ன் முதல் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தினார். டெவன் கான்வே 10 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 1 ரன்னிலும், டேரில் மிட்செல் 10 ரன்களிலும் வெளியேற, டாம் லாதம் மற்றும் க்ளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி இருவரும் 179 ரன்களை குவித்தனர்.
டாம் லாதம் 104 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் விளாசி 118 ரன்கள் எடுத்து சாம்பியன்ஸ் டிராபியில் 2வது சதத்தை பதிவு செய்து இறுதி வரை களத்தில் நின்றார். பிலிப்ஸ் 39 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் விளாசி 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இதில் ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. சவுத் ஷகீல் 6 ரன்னிலும், கேப்டன் முகமது ரிஸ்வான் 3 ரன்னிலும், அவுட் ஆகி வெளியேறினர். பாபர் அசாம் 64 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஃபகார் ஜமான் 24 ரன்களும், சல்மான் ஆகா 42 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். தயப் தாஹிர் 1 ரன்னிலும், ஷஹீன் அப்ரிடி 14 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து சீரான இடைவெளியில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர்.
குஷ்தில் ஷா69 ரன்களும், நசீம் ஷா 13 ரன்களும், ஹரிஸ் ரவூப் 19 ரன்களும் எடுத்து அவுட் ஆக 47.2 ஓவரில் பாகிஸ்தான் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு சென்றது. அதிரடியாக விளையாடிய டாம் லாதம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
நாளை துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாட உள்ளது.