“ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இருக்கணும்”..உத்தரவு போட்ட ஐசிசி..ஏற்றுக்கொண்ட பிசிசிஐ!’
2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தானின் பெயரை அணி சேர்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் : பொதுவாக, ஐசிசி நடத்தும் போட்டிகளில், நடத்தும் நாட்டின் பெயர் மற்றும் லோகோவின் கீழ் அணிகளில் விளையாடும் வீரர்கள் ஜெர்சியில் இடம்பெறும். எனவே, 2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ள காரணத்தால் பாகிஸ்தான் அணி பெயரை மற்ற அணிகள் தங்களுடைய ஜெர்சியில் அச்சிடப்பட்டு விளையாடவேண்டும் என்ற சூழ்நிலை நிலவியது.
ஆனால், இந்திய அணி பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்காமல், துபாயில் நடைபெறும் போட்டிகளில் மட்டுமே பங்கேற்க இருப்பதால், ஜெர்சியில் பாகிஸ்தானின் பெயரை அச்சிட வேண்டிய அவசியம் இல்லை என பிசிசிஐ மறுத்ததாக செய்திகள் வெளியானது.
பிசிசிஐ இதற்கு மறுப்பு தெரிவித்தது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது ” கிரிக்கெட் எனும் விளையாட்டிற்குள் பிசிசிஐ அரசியலை கொண்டு வருகிறது என்பது சரியானதாக இல்லை. விளையாட்டிற்கு இது நல்லதல்ல. பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய மறுத்துவிட்டனர். CT தொடக்க விழாவிற்கு தங்கள் கேப்டனை பாகிஸ்தானுக்கு அனுப்ப விரும்பவில்லை” என கூறியிருந்தார்.
இதனையடுத்து, இந்த விவகாரத்தில் ஐசிசி தலையிட்டு ” விதிமுறைகளின் படி, நடத்தும் நாட்டின் பெயர் மற்றும் லோகோ அணிகளின் ஜெர்சியில் இடம்பெற வேண்டும். அப்படி இல்லை விதியை மீறினால் நிச்சியமாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் கூறியிருந்ததாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகியும் இருந்தது.
இந்த சூழலில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இறுதியாக மனந்திரும்பியது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை பாகிஸ்தானின் பெயரை அச்சிட அனுமதிக்க ஒப்புக்கொண்டது என கூறப்படுகிறது.
“ஐசிசி வழிகாட்டுதல்கள் எதுவாக இருந்தாலும் நாங்கள் பின்பற்றுவோம்” என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கிரிக்பஸ்ஸிடம் தெரிவித்தார். எனவே, பிசிசிஐ இதற்கு ஒப்புக்கொண்டுள்ள காரணத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மகிழ்ச்சியில் உள்ளது.