இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?
பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்த சூனியம் செய்ததாக அந்நாட்டு தனியார் ஊடகம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் பேசியது பேசுபொருளாகியுள்ளது.

துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் தொடர்ந்து 2 தோல்விகளை சந்தித்தது. நேற்றைய போட்டியின் முடிவுகளை எதிர்நோக்கி இருந்தது. ஆனால், நேற்றைய நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியும் பாகிஸ்தான் எதிர்பார்த்தது போல இல்லை என்பதால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியாத நிலை உருவாகி உள்ளது.
பாகிஸ்தான் அணி நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வி கண்டது. இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. நேற்றைய போட்டியில் வங்காதேச அணி நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தால் பாகிஸ்தானுக்கு வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் நேற்று நியூசிலாந்து வெற்றி பெற்றதால் அரையிறுதி வாய்ப்பை பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் இரண்டுமே நழுவவிட்டன. நியூசிலாந்து அணியும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது.
இதுகுறித்து நேற்று பாகிஸ்தான் ஊடகங்கள் பேசிய கருத்துக்கள் தான் பேசுபொருளாகி உள்ளன. பாகிஸ்தான் ஊடகம் ஒன்றில் இந்த தோல்விகள் குறித்து ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற, இந்தியா துபாய்க்கு 22 சாமியார்களை அனுப்பியதாக அவர்கள் கூறினர்.
மேலும், போட்டிக்கு ஒரு நாள் முன்பு, 7 சாமியார்கள் மைதானத்திற்குள் சென்று சூனியம் செய்ததாக இன்னொரு நபர் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி நல்ல தொடக்கத்தைப் பெற்றாலும், இந்தியர்கள் செய்த சூனியத்தால் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை என கலந்துரையாடலில் கருத்துக்கள் பகிரப்பட்டன.
இந்த விவாதத்தின் போது, இதற்கு முன்னர் 2011ஆம் ஆண்டு, உலகக்கோப்பை அரையிறுதியில் கூட இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்த சூனியம் செய்தனர் என்றும் அவர்கள் மூடநம்பிக்கையில் குற்றம் சாட்டினர். இந்த விவாதம் பற்றிய பேச்சுக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.