அவுட்டா..? நாட்-அவுட்டா? சர்ச்சையை கிளப்பிய கே.எல். ராகுல் விக்கெட்! நடந்தது என்ன?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுலுக்கு அம்பயர் தவறுதலாக அவுட் கொடுத்ததாக ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மா இல்லாததால், அதற்கு மாற்றாக துவக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் களமிறங்கினார். இந்தியா 47/4 என தடுமாறிய நிலையில், ராகுல் 74 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தார்.
விக்கெட் தொடர்ச்சியாக விழுந்து கொண்ட இருந்த காரணத்தால் பொறுமையாக விளையாடினாள் தான் ரன்கள் குவிக்க முடியும் என்ற நோக்கத்துடன் கே.எல்.ராகுல் விளையாடி கொண்டு இருந்தார். 23-வது ஓவரை வீசுவதற்காக மிட்செல் ஸ்டாக் வந்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை (22.2 ஓவர்) எதிர்கொண்ட கே.எல்.ராகுல் நிதானமாக விளையாட நினைத்தார்.
ஆனால், அந்த பந்து பேட்டில் பட்டது போல எட்ச் ஆகி கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சென்றது. முதலில் இதற்கு களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுக்கவில்லை. ஆனால், தந்திரமாக ஆஸ்திரேலிய வீரர்கள் DRS முறையை பயன்படுத்தி மீண்டும் சோதனை செய்து பார்க்க முடிவெடுத்தனர். அந்த முடிவில் கே.எல்.ராகுல் அவுட் என மூன்றாம் நடுவர் தீர்ப்பு வழங்கினார்.
DRSயில் பார்த்த போது Ultra Edge தொழில்நுட்பத்தில் ஒரு சிறிய அசைவு கண்டறியப்பட்டது. அதன்படி அவுட் கொடுத்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்து, கே.எல் ராகுலின் தொடை பகுதியில், பேட் உரசிய போது வந்த ஸ்னிக்கோ மீட்டர் சிக்னலை, பந்தில் உரசிய போது வந்த சிக்னல் என நினைத்து 3-ம் நடுவர் தவறுதலாக அவுட் கொடுத்துவிட்டார் என பலரும் கூறி வருகிறார்கள்.
இருப்பினும், அது, அவுட் இல்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாசிம் ஜாபர், இர்பான் பதான் போன்ற வீரர்களும் , கிரிக்கெட் விமர்சகர்கள், மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இது போன்ற சம்பவங்களால் மூன்றாம் நடுவரை குறை சொல்லுவதா? அல்லது தொழில்நுட்பத்தை குறை சொல்லுவதா? என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.