எங்கள் உறவு டிஆர்பி-க்கானது இல்ல..! விராட் கோலியை பற்றி மனம் திறந்து பேசிய கம்பீர் ..!
மும்பை : விராட் கோலியுடனான சர்ச்சையை குறிப்பிட்டு எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் பதிலளித்து பேசி உள்ளார்.
இந்த ஆண்டில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் 17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பில் இருந்த ராகுல் டிராவிட் கோப்பைக்கனவை நிறைவேற்றி இருந்தார். மேலும், அவரது பதவிக்காலமும் அந்த தொடருடன் முடிவடைந்திருந்தது. அதனை தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை பிசிசிஐ தேர்வு செய்திருந்தது.
இவர் வருகிற ஜூலை 27 முதல் நடைபெறவிருக்கும் இலங்கை அணிக்கு எதிரான தொடர்களிலிருந்து இந்திய அணியை வழிநடத்த உள்ளார். இந்திய அணி இலங்கையில் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரும், 3 டி20 போட்டியை கொண்ட தொடரும் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், அந்த அணி பல விமர்சனங்களை சந்தித்து இருந்தது.
இது போன்ற ஒரு சூழலில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் தன்னுடைய முதல் செய்தியாளர் சந்திப்பை எதிர்கொண்ட கம்பீர், பல்வேறு எதிர்மறையான கேள்விக்கு பதிலளித்தார். அந்த வகையில் பத்திரிகையாளர்கள் விராட் கோலி மீது உண்டான உங்களது உறவு எத்தகையது என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு கவுதம் கம்பீர், “எங்கள் இருவருக்கும் இடையிலான உறவு என்பது டிஆர்பி-க்கானது (TRP) அல்ல. இது இரண்டு முதிர்ந்த நபர்களுக்கு இடையே உள்ள ஒரு நட்பாக நான் நினைக்கிறேன்.
அந்த நேரத்தில் களத்தில், ஒவ்வொரு வீரரும் தங்கள் சொந்த அணிக்காக போராடி வெற்றி பெறுவதற்கான பணியை செய்வார்கள். நாங்களும் இதனை ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் எங்கள் அணிக்காக அதைத்தான் செய்தோம். ஆனால் இந்த நேரத்தில் நாங்கள் இருவரும் இந்தியாவுக்காக விளையாட போகிறோம். நாங்கள் 140 கோடி இந்தியர்களைப் சந்தோஷபடுத்துவோம். மேலும், நாங்கள் ஒரே பக்கத்தில் இருக்கப் போகிறோம், இந்தியாவை பெருமைப்படுத்த முயற்சிப்போம் என்று நான் நம்புகிறேன்”, என கவுதம் கம்பீர் கூறி இருந்தார்.