முட்டாள்கள் தான் சச்சினுடன் கோலியை ஒப்பிடுவார்கள்… பாகிஸ்தான் பிரபலம் விமர்சனம்.!
சச்சினுடன் கோலியை ஒப்பிடுவது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கடுமையாக விமர்சனம்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை சாப்பிடுபவர்கள் முட்டாள்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறியுள்ளார். தற்போதைய கிரிக்கெட்டில் ரன் மெஷின் என்றழைக்கப்படும் விராட் கோலி, கிரிக்கெட்டில் அவ்வப்போது பல சாதனைகளை முறியடிக்கும் போது சச்சினின் 100 சதமடித்த சாதனையை கோலி முறியடிப்பாரா என ரசிகர்கள் இடையே அவ்வப்போது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சச்சின், படைக்காத சாதனைகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் ரசிகர்கள் எப்போதும் சச்சினுடன், கோலியை ஒப்பிட்டு யார் சிறந்த பேட்ஸ்மேன் என தங்களுக்குள் சண்டையிட்டு வருகின்றனர். இது குறித்து சோயப் அக்தர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
சச்சின் போன்ற சிறந்த வீரர்களுடன் நீங்கள் கோலியை ஒப்பிடமுடியாது. உலகின் சிறந்த வீரர்களின் பட்டியலில் முதலும் கடைசியும் சச்சின் தான். அவரைப்போன்று கிரிக்கெட்டில் யாராலும் பேட்டிங்கில் ஆட்சி செய்தது கிடையாது. சச்சின் முன்பாக நீங்கள் எந்த பேட்ஸ்மனையும் ஒப்பிட முடியாது, விஷயம் தெரியாத முட்டாள்கள் தான் அப்படி செய்வார்கள்.
விராட் கோலி தற்போதைய தலைமுறையில் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன், ஆனால் சச்சின் போன்று எந்த வீரரும் எதிரணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது கிடையாது என்று அக்தர் ரேடியோ சிட்டிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தற்போது விராட் கோலி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராகி வருகிறார். ஐபிஎல் தொடரில் சிறந்த பார்மில் இருக்கும் அவர் மீதான எதிர்பார்ப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் அதிகரித்துள்ளது.