இந்தியா – கனடா இடையே தொடரும் விரிசல்! இந்தியா மீது கனடா பிரதமர் பகீர் குற்றச்சாட்டு!

கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறிவிட்டது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார்.

PM modi - pm Justin

டெல்லி : கனடாவில் வாழ்ந்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில், இந்தியாவுக்கு பங்கு உண்டு என கனடா பிரதமர் ட்ரூடோ முன்னதாக குற்றஞ்சாட்டி இருந்தார். இதனால், இந்த விவகாரம் அடுத்தகட்டமாக முற்றியது.

இதன் விளைவாக கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை திரும்ப வரவழைத்த இந்தியா, இங்குள்ள கனடா தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உள்ளது. அதன்படி, 6 கனடா தூதரகள் அனைவரும் வருகிற அக்டோபர் 19-ம் தேதி இரவு 11.59 மணிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது இந்தியா மற்றும் கனடா இடையே மேலும் விரிசலை அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது. கனடாவில் உள்ள இந்திய தூதர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அந்நாட்டு அரசின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை இல்லை எனவும் கனடா மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

மேலும், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசின் நடவடிக்கைகள் தூதர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாக இருக்கிறது எனவும் மத்திய அரசு குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில், தற்போது கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது அடுக்கடுக்காக குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து பிரதமர் ட்ரூடோ  பேசிய போது, “கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறிவிட்டது.

மோடி அரசுக்கு எதிரானவர்களின் விவரங்கள் அனைத்தும் லாரான்ஸ் பிஷ்னோய் போன்ற கிரிமினல் கும்பல்களிடம் செல்கிறது. இது கனடா நாட்டவர்களுக்கு எதிராக வன்முறைக்கு வழிவகுகிறது”, என பகிரங்க குற்றச்சாட்டை பிரதமர் ஜஸ்டின் முன்வைத்துள்ளார். இவரது இந்த குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்