மூன்று விதமான கிரிக்கெட்டிலும் ஒருநாள் அவர் தலைமை தாங்குவார் ..! இளம் வீரரை பற்றி மனம் திறந்த விக்ரம் ரத்தோர் ..!
விக்ரம் ரத்தோர் : இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில்லின் சமீபத்திய விளையாட்டு விமர்சனம் அடைந்த நிலையில் விக்ரம் ரத்தோர் அவரது கேப்டன்சியை குறித்து பேசி இருக்கிறார்.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது முதன் முறையாக இந்தியா அணியை சுப்மன் கில் வழிநடத்தினார், இவரது கேப்டன்சியில் இளம் இந்திய அணி தொடரை 4-1 என கைப்பற்றியது. அதே போல ஐபிஎல் தொடரிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியை கில் வழிநடத்தினார். அதனை தொடர்ந்து தற்போது இலங்கை அணியுடனான தொடரில் சுப்மன் கில் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இவரையும், இவரது கேப்டன்சியை குறித்தும் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “எல்லா விளையாட்டிலும் நான் கில்லை பார்த்திருக்கிறேன், குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவோ அல்லது ஜிம்பாப்வே தொடரிலோ அவர் சிறப்பாகவே செயல்பட்டார். அவர் மிக சிறந்த விளையாட்டை விளையாடியுள்ளார்.
இது ஒரு அணியை நீங்கள் தலைமை வகிக்கும் போது மிகவும் அவசியமான ஒன்று. இப்போது துணை கேப்டன் பதவியுடன், பிசிசிஐ அவருக்கு கூடுதல் பொறுப்பை வழங்கியுள்ளது. மேலும், அவர் இந்த துணை கேப்டனாக பொறுப்பில் இருந்து சிறப்பாக செயல்படுவார் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். கேப்டன்ஷிப் செய்யும் பொழுது விராட் மற்றும் ரோஹித் இருவரும் அவர்களது சிறந்த அம்சங்களை வெளிப்படுத்தியது போலவே, கில்லும் கேப்டனாக வெளிப்படுத்தி விளையாடுவார்.
அதே சமயம், அவர் இன்னும் கேப்டன் ஆகவில்லை இருப்பினும் தலைமை குழுவில் இருப்பது அவரின் சிறந்த அம்சங்களை வெளிப்படுத்தும் என்பதில் நான் நிச்சயமாக நம்புகிறேன். இந்நிலையில், மற்றவர்களை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பது அவருக்கு கூடுதல் பொறுப்புணர்ச்சியை அளிக்கிறது இந்திய அணியை மூன்று விதமான கிரிக்கெட்டிலும் (50 ஓவர், டெஸ்ட், டி20) ஒருநாள் அவர் தலைமை தாங்குவார் என நான் நம்புகிறேன்”, என்று விக்ரம் ரத்தோர் பேட்டியில் கூறி இருந்தார்.