ஒரு நாள் கிரிக்கெட்; இந்திய அணி அபார வெற்றி..!
இங்கிலாந்து அணி 42.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 251 ரன்கள் மட்டுமே எடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று முதல் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர். அதன்படி இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா – ஷிகர் தவான் களமிறங்கினர்.
28 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா வெளியேறியதை தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களில் வெளியேற, மத்தியில் சிறப்பாக விளையாடி வந்த தவான் சதம் விளாசி அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 98 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
அதனைதொடர்ந்து ஹர்திக் பாண்டியா 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேற, கே.எல்.ராகுலுடன், க்ருணால் பாண்டியா இணைந்து அதிரடியாக விளையாடினர். இருவரும் அரைசதம் விளாசினர். க்ருணால் பாண்டியா 58*, கே.எல்.ராகுல் 62* ரன்களுடன் கடைசிவரை களத்தில் நின்றனர். இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 317 ரன்கள் எடுத்தது.
இதனைதொடர்ந்து இங்கிலாந்து அணி 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ஜோனி பேர்ஸ்டோவ் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். நிதானமாக விளையாடி வந்த ஜேசன் ராய் 46 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் 1 ரன் எடுத்து வெளியேற அடுத்த சில நிமிடங்களில் அதிரடியாக விளையாடி வந்த ஜோனி பேர்ஸ்டோவ் சதம் அடிக்காமல் 94 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் இறங்கிய மொயீன் அலி 30, மோர்கன் 22 ரன்களுடன் வெளியேற இதைத்தொடர்ந்து, களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக இங்கிலாந்து அணி 42.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 251 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், இங்கிலாந்து அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.