ஒருநாள் உலகக்கோப்பை: வெற்றியை தொடருமா இந்தியா? வங்கதேசத்துக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கடந்த 30ம் ஏத்தி தொடங்கி இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரின் 17-ஆவது லீக் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இதுவரை இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதில், சென்னையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதையடுத்து, டெல்லியில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்தது.
இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி பேட்டிங், பவுலிங் என அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால், இந்த முறை கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. இந்த சூழலில் இன்றைய போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா. வங்கதேச அணி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் வென்று, அடுத்தடுத்து 2 தோல்விகளை அடைந்துள்ளது.
இதனால் நான்காவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இந்திய அணியும், வெற்றிப்பாதைக்கு திரும்ப வங்கதேச அணியும் தீவிரமாக இருக்கும். இதுவரை இந்தியா – வங்கதேசம் அணிகள் விளையாடிய 40 ஒருநாள் போட்டிகளில் 31 போட்டிகளில் இந்திய அணியும், 8 போட்டிகளில் வங்கதேச அணியும் வென்றுள்ளன.
இருப்பினும், 2007ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி கொடுத்த அதிர்ச்சியை இந்திய அணியாலும், ரசிகர்களாலும் எளிதில் மறந்திட முடியாது. இதுபோன்று, ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் கூட வங்கதேச அணியிடம் இந்திய அணி மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. இதனால் வங்கதேச அணியுடன், இந்திய அணி எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.
எனவே, இந்தியா – வங்கதேசம் இடையேயான இன்றைய போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு புனேவில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனிடையே, உலகக்கோப்பை தொடருக்கான புள்ளி பட்டியலில் நடந்த 4 போட்டிகளிலும் வென்று நியூசிலாந்து அணி முதலிடத்தில் இருந்தாலும், மூன்றுக்கு மூன்று தொடர் வெற்றி பெற்று இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்க அணி 2 வெற்றி ஒரு தோல்வியுடன் மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 2 வெற்றி, தோல்வியுடன் 4வது இடத்திலும் உள்ளன. இதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் முதலிடத்துக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.