ஒருநாள் உலகக்கோப்பை: அபார பந்துவீச்சு! பாகிஸ்தான் ஆல் அவுட்.. இந்தியாவுக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு!
உலக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது. இப்போட்டியை நேரில் காண்பதற்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டக்காரர்களான அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக் ஜோடி முதலில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், 20 ரன்களில் அப்துல்லா ஷபீக் விக்கெட்டை விட, அவரை தொடர்ந்து நிதானமாக விளையாடி வந்த அப்துல்லா இமாம்-உல்-ஹக் 36 ரன்கள் இருக்கும்போது ஹர்திக் பாண்டியா விக்கெட்டை எடுத்தார்.
இதன்பின், கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி விக்கெட்டை விடாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், பாபர் அசாம் 50 ரன்கள் அடித்ததை அடுத்து சிராஜ் பந்தில் போல்ட் ஆனார். இந்த பாகிஸ்தான் அணிக்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால், பாபர் அசாம் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், கடைசி வரை இருந்து அணிக்கு ரன்களை குவிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்கெட்டை இழந்தார்.
அதுமட்டுமில்லாமல், அவருடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி வந்த முகமது ரிஸ்வானும் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா பந்தில் போல்ட் ஆனார். இது பாகிஸ்தான் அணிக்கு மேலும் பின்னடைவை கொடுத்தது. இதன்பின் வந்த பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி பந்துவீச்சை பொறுத்தவரையில், அதிகமாட்சமாக ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி வந்த பாகிஸ்தான் அணி பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் விக்கெட்டுக்கு பிறகு மற்ற வீரர்கள் சிறப்பாக ஜொலிக்கவில்லை, இந்திய பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. இதனால், பாகிஸ்தான் அணி 191 ரன்களை மட்டுமே அடித்து இந்தியாவுக்கு எளிமையான இலக்கை நிர்ணயித்துள்ளது. இருப்பினும், பாகிஸ்தானிலும் சிறந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதால், இந்திய அணியின் வெற்றி சுபமாக இருக்காது என கருதப்படுகிறது.