ஓவருக்கு இடையே பவுலர்களை தண்ணீர் குடிக்க விடக்கூடாது ..! ஐசிசிக்கு கோரிக்கை விடுக்கும் சுனில் கவாஸ்கர் ..!

Sunil Gavaskar

சுனில் கவாஸ்கர் : கிரிக்கெட் வரலாற்றில் காலத்திற்கு ஏற்றவாறு புது புது நிபந்தனைகளை ஐசிசி விதித்து வருகிறது. அந்த விதிகளில் ஒரு சில விதிகள் பவுலர்களுக்கு ஏற்றவாறு இருக்கும் ஒரு சில விதிகள் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றவாறு இருக்கும். சமீபத்தில் கூட ஒரு ஓவருக்கு இரண்டு பந்துகள் பவுன்சர் போடலாம் என்ற விதியை கொண்டு வந்தனர்.

இந்த விதி அப்போது பல சர்ச்சையை சந்தித்தது, மேலும் இது பவுலர்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. இந்த விதியை குறித்து அப்போது பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பல விமர்சங்கள் செய்தனர், அதில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் இது பவுலர்களுக்கு சாதகமாக அமையும் என்றும் கூறி இருந்தார்.

தற்போது சுனில் கவாஸ்கர் மற்றும் ஒரு கிரிக்கெட் விதியை கொண்டு வரவேண்டும் என ஐசிசி-க்கு கோரிக்கை விடுத்துள்ளார். அது என்னவென்றால் பவுலர்கள் ஓவருக்கும் அடிக்கடி தண்ணீர் அருந்த கூடாது என்பது தான்.

இது குறித்து ஸ்போர்ட்ஸ் ஸ்டாரில் பேசிய அவர், “கிரிக்கெட்டில் போட்டியில் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் ஓவரை முடித்து விட்டு ஃபீல்டிங் செய்ய செல்லும் போது பவுண்டரி எல்லையில் புத்துணர்ச்சியூட்டும் பானத்தை குடித்து கொண்டு வருவது அதிகரித்து விட்டது.

ஆனால் அதை அந்த போட்டியின் அதிகாரிகள் பார்த்துக் கொண்டு கண்ணை மூடி கொண்டுள்ளனர். பவுலர்கள் ஒரு ஓவரை வீசி  முடிந்ததும் தண்ணீர் குடிக்க சென்றால் பின்னர் எதற்காக தண்ணீர் இடைவேளை விட வேண்டும்?. ஓவர் முடிந்த பின்போ அல்லது ஒரு ஓவரில் 4 டபுள் ரன்கள் ஓடிய பின்போ பேட்ஸ்மேன்களுக்கு இது போன்று தண்ணீர் குடிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

கிரிக்கெட் என்பது ஸ்டாமினாவை பொறுத்த விளையாட்டு தான் அதில் சந்தேகமில்லை. இருந்தாலும், ஒவ்வொரு மணி நேரமும் விளையாடிய பின் எதிரணி கேப்டன் மற்றும் நடுவரின் அனுமதியுடன் மட்டுமே பவுலர்கள் தண்ணீர் அருந்துவதற்கு அனுமதிக்கப்பட்ட பழைய விதிகளை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

அதே போல ரிசர்வ் வீரர்கள் ஓவர்களுக்கு இடையே களத்திற்குள் சென்று தங்கள் அணியின் வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்காதவாறு நடுவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இது போன்ற புதிய விதிகளை ஐசிசி கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்”, என்று கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்