நாளை கடைசி போட்டி.. அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது – பாபர் அசாம்..!
பாகிஸ்தான் தனது கடைசி லீக் போட்டியில் நாளை இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இதைத்தொடர்ந்து, இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாபர் ஆசம் கூறுகையில், நாங்கள் இந்தியாவிடமிருந்து நிறைய அன்பையும், ஆதரவையும் பெற்றுள்ளோம். பாகிஸ்தானுக்கு இன்னும் ஒரு போட்டி உள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் வென்றிருக்க வேண்டும். உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் தோல்விக்கு யாரையும் குறை கூற முடியாது.
பந்துவீச்சையோ..? பேட்டிங்கையோ..? நீங்கள் குறை சொல்ல முடியாது. எங்களின் ஒட்டுமொத்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தவறிவிட்டோம் என கூறினார். இந்த உலகக் கோப்பையில் எங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நான் கடந்த மூன்று ஆண்டுகளாக பாகிஸ்தான் கேப்டனாக இருக்கிறேன். கேப்டன் பதவியின் அழுத்தத்தை நான் உணர்ந்ததில்லை. கேப்டன் பதவியில் எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. மக்கள் எனது கேப்டன்சியைப் பற்றிப் பேசுகிறார்கள்.
தனது கேப்டன் பதவியின் எதிர்காலம் குறித்து எந்த எண்ணமும் இல்லை. உலகக் கோப்பை முடிந்ததும் எனது கேப்டன் பதவி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விவாதிக்கும். நாங்கள் மீண்டும் பாகிஸ்தானுக்குச் செல்வோம். ஏனெனில் இப்போதைக்கு இந்த உலகக் கோப்பையில் மீதமுள்ள லீக் போட்டியில் மட்டுமே நான் கவனம் செலுத்துகிறேன். அரைசதங்களை அடிக்க எனக்கு ஒருபோதும் இலக்கில்லை. நான் மெதுவாக ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடினேன். ஆனால் சூழ்நிலை எனக்கு முக்கியம். நான் எப்போதும் அணிக்காக விளையாடுகிறேன் என தெரிவித்தார்.
1999 முதல் உலகக்கோப்பைகளில் பாகிஸ்தான் ஏன் தோல்வி அடைகிறது என்று ஒரு இந்திய பத்திரிகையாளர் கேள்வி கேட்டார். அதற்கு பாபர் ஆசம் 1999 முதல் உலகக் கோப்பைகளில் பாகிஸ்தான் மோசமாக உள்ளது என்பது தவறான கருத்து. நாங்கள் டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். பாகிஸ்தான் நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறது. ஆனால் உலகக்கோப்பையை மட்டும் தவற விட்டுள்ளது என்று கூறினார்.
இதுவரை நடந்த உலகக்கோப்பையில் தொடர்களில் ஒரு முறை மட்டுமே கோப்பையை கைப்பற்றி உள்ளது. 1992-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நிகர ரன் ரேட் குறித்து நாங்கள் திட்டமிட்டுள்ளோம். முதலில் களமிறங்க விரும்புகிறோம். பவர்பிளேவில் விளையாடுவதற்கும், கூட்டணி அமைத்து விளையாடுவதற்கும் எங்களிடம் திட்டம் உள்ளது. ஃபகார் ஜமான் கிரீஸில் நிலைத்திருந்தால் எங்களின் இலக்கை அடைய முடியும் என கூறினார்.
பாகிஸ்தான் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் 275 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறலாம். அப்படி இல்லையென்றால் ரன் சேஸிங் செய்து பாகிஸ்தான் இலக்கை எட்ட வேண்டும். அதுவும் வெறும் 2.3 ஓவர்களில் அதாவது 15 பந்துகளில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த இலக்கை அடைய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பாகிஸ்தானின் நெட் ரன் ரேட் நியூசிலாந்தை விட அதிகமாக இருக்கும்.