காலில் வலி இல்லை..விரைவில் ஆஸி. தொடரில் பங்கேற்பேன் – முகமது சமி பேச்சு!
காயத்திலிருந்து மீண்டு வரும் போது பொறுமை மிகவும் முக்கியமானது எனவும், நான் 100% சதவீதம் பங்களிப்பை ஆஸ்திரேலிய தொடரில் கொடுப்பேன் எனவும் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ஆஸ்திரேலியா அணியுடனான 5 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரானது அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில் அதற்கான இந்திய அணியை இதுவரை பிசிசிஐ அறிவிக்கவில்லை. அதே நேரம் காயத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி ஆஸ்திரேலிய அணியுடனான தொடரில் விளையாடவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும், அதற்கான பயிற்சியிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இந்திய அணியின் பயிரிச்சியாளரான அபிஷேக் நாயர், ஷமியின் உடற்தகுதி எப்படி இருக்கிறது எனத் தெரிந்து கொள்ள நேற்று வலைப்பயிற்சியில் அவரை பந்து வீசச் செய்துள்ளார். அதில், பயிற்சிப் பெற்றப் பிறகு பெங்களூருவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவரது உடற் தகுதியைக் குறித்து ஷமி பேசியிருந்தார்.
அவர் பேசுகையில், “காயத்திலிருந்து மெல்ல மெல்ல நான் குணமடைந்து வருகிறேன். தற்போது எனக்குக் காலில் வலி இல்லை, பயிற்சியிலும் நான் கொஞ்சம் தூரம் ஓடி வந்து தான் பந்து வீசினேன். மேலும், என் உடம்பில் நான் பெரிய அளவில் அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை.
ஆனாலும், நேற்று நான் முழுவீச்சில் பந்துவீச்சில் ஈடுபட்டேன். என்னுடைய 100 சதவீத பங்களிப்பை அதில் கொடுத்தேன். நான் 100% உடல் தகுதியை பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். மேலும், ஆஸ்திரேலியா தொடருக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கிறது.
அதற்குள் நான் உடல் தகுதியில் தேர்ச்சி பெற வேண்டும். என்னால் எப்போது பயிற்சியில் ஒரே நாளில் 20 முதல் 30 ஓவர்கள் வீச முடிகிறதோ, அப்போது தான் மருத்துவர்கள் எனக்குச் சான்றிதழ் அளிப்பார்கள். அதன்பிறகு நான் ரஞ்சி கோப்பை தொடரில் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டு இருக்கிறேன்.
அதில் என்னுடைய உடல் தகுதியும் ஃபார்மையும் உறுதி செய்துவிட்டு பின் ஆஸ்திரேலிய தொடரில் பங்கு பெறுவேன். நாம் காயத்திலிருந்து மீண்டு வரும் போது பொறுமை மிகவும் முக்கியம். ‘என்னடா இது வாழ்க்கை’ என வெறுத்து விடக்கூடாது. அதற்கு பதில் பொறுமையாக இருந்து சாதிக்க வேண்டும்”, என முகமது ஷமி பேசி இருந்தார்.