வாணவேடிக்கை காட்டிய ‘நிதிஷ் ரெட்டி’! 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
இன்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் அதிரடி வீரரான நித்திஷ் ரெட்டி 74 ரன்கள் விளாசி அதிரடி காட்டினார்.
டெல்லி : இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரில் 2-வது போட்டியானது இன்று டெல்லியில் உள்ள அருண்ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது. வங்கதேச அணியின் அபார பந்து வீச்சால் தொடக்கத்தை சரியாக தொடங்க முடியாத இந்திய அணி 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய இளம் வீரரான நித்திஷ் ரெட்டியும், ரிங்கு சிங்கும் வான வேடிக்கை நிகழ்த்தினர்.
இருவரும் வங்கதேச அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். ஆரம்பத்தில் சற்று நிதானமாக விளையாடிய நித்தீஷ் ரெட்டி 10 பந்துகளை பிடித்ததற்கு மேல் அதிரடியின் உச்சத்தில் விளையாடினார். அவருடன் இணைந்த ரிங்கு சிங்கும் மிக அதிரடியாக விளையாடினார்.
அவர்களுக்கு அடுத்தபடியாக ஹர்திக் பாண்டியாவும் 19 பந்துகளுக்கு 32 ரன்கள் எடுத்து ஒரு அதிரடி கேமியாவை பதிவு செய்தார். இறுதியில் 20 ஓவர்களும் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது.
வங்கதேச அணியில் ரிஷாத் ஹுசைன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதனைத் தொடர்ந்து 222 என்ற இமாலய இலக்கை நோக்கி வங்கதேச அணி வீரர்கள் களமிறங்கினார்கள். இந்திய அணியின் அசுரத்தனமான பந்து வீச்சால் வங்கதேச அணி தட்டி தட்டி ரன்களை சேர்க்க முடிந்ததே தவிர, இந்திய அணி போல பவுண்டரிகளில் ரன்களை எடுக்க முடியவில்லை.
ஆனாலும் இலக்கு பெரியது என்பதால் வங்கதேச அணிக்கு அடித்து விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அடித்து விளையாட முற்பட்டபோது வங்கதேச பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் வலையில் விழுந்தனர்.
அதன்படி தொடக்க வீரர்களான பர்வஸ் ஹுசைன் 16 ரன்களும், லிட்டர் தாஸ் 14 ரன்களும், நஜ்முல் ஹுசைன் 11 ரன்களும், மெகதி ஹசன் 16 ரன்களும் எடுத்தனர். இருப்பினும் முகமதுல்லா மட்டும் நிலைத்து நின்று விளையாடி 41 ரன்கள் சேர்த்தார்.
அவருடன் இணைந்து எந்த ஒரு வீரரும் கை கொடுக்காததால் வங்கதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியை வெற்றி பெற்றது. மேலும், 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் இந்திய அணி 2-0 என கைப்பற்றி அசத்தியது.