முதல் சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டி! அசத்தல் பரிசுதொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய நிதிஷ்குமாருக்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுவதாக ஆந்திர கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3), விராட் கோலி (36), ரிஷப் பந்த் (28) என ஆட்டமிழந்த நிலையில், இனிமேல் யார் இறங்கி விளையாடி ரன்களை உயர்த்த போகிறார் என ரசிகர்கள் சோகத்தில் இருந்தார்கள். அந்த சமயத்தில் தான் நான் இருக்கிறேன் என நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கினார்.
அவர் களமிறங்கியவுடன் ஆஸ்ரேலியா வீரர்களும் யார்ரா இந்த பையன் என்கிற வகையில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதன்பிறகு அவருடைய பந்தை நிதானமாக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி 176 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 105 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.போட்டியில் அவர் 170 பந்துகளில் சதம் விளாசினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்த அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவர் சதம் விளாசியதை பார்த்துவிட்டு நிதிஷ் குமார் ரெட்டி தந்தை மைதானத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.தந்தை மட்டுமின்றி நிதிஷ் குமார் ரெட்டி சதம் விளாசியதை அவருடைய குடும்பமும் கொண்டாடியது.
இந்த சூழலில், சிறப்பாக விளையாடி சதம் விளாசிய அவருக்கு ரூ. 25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என ஆந்திர கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆந்திரா கிரிக்கெட் வாரியம் “ஆந்திர கிரிக்கெட் சங்கத்திற்கு இது ஒரு அதிர்ஷ்டமான நாள் மற்றும் மகிழ்ச்சியான தருணம். ஆந்திராவில் இருந்து ஒரு சிறுவன் டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 வடிவத்திற்கு தேர்வு செய்யப்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கவுரவமாக, ஆந்திர கிரிக்கெட் சங்கம் சார்பில், ரூ. 25 லட்சம் பரிசுத் தொகை நிதிஷ் குமார் ரெட்டிக்கு வழங்கப்படுகிறது” என தெரிவித்துள்ளது.