அடுத்தடுத்து தெறிக்கும் ‘ஸ்டெம்ப்’ – இங்கிலாந்தை மிரட்டிய பும்ரா ..!
டெஸ்ட் போட்டியில் பும்ரா 101 விக்கெட்டை பறித்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 148.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 466 ரன்கள் எடுத்தனர். இதனால், இந்திய அணி 367 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது இருவரும் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். நேற்றைய 4-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட்டை இழக்காமல் 32 ஓவரில் 77 ரன்கள் எடுத்தனர். இந்நிலையில், இன்று கடைசி மற்றும் 5-ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் நிதானமாக விளையாடிய ரோரி பர்ன்ஸ் அரைசதம் அடித்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த டேவிட் மாலன் வந்த வேகத்தில் 5 ரன் எடுத்து வெளியேறினார். சிறப்பாக விளையாடிய ஹசீப் ஹமீது 63 ரன்கள் எடுத்து போல்ட் ஆனார். பிறகு களம்கண்ட ஒல்லி போப் 2, ஜானி பேர்ஸ்டோ ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து பும்ரா வீசிய பந்தில் போல்ட் ஆனார்கள். அடுத்து இறங்கிய மொயின் அலி ரன் எடுக்காமலும் விக்கெட்டை கொடுக்க, இதனால் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
பும்ரா ஒல்லி போப் விக்கெட்டை பறித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் பும்ரா வீழ்த்திய 100-வது விக்கெட் ஆகும். இதுவரை டெஸ்ட் போட்டியில் 101 விக்கெட்டை பறித்துள்ளார். இங்கிலாந்து அணி வெற்றிபெற இன்னும் 219 ரன்கள் தேவைப்படுகிறது.