அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்த நியூஸிலாந்து மகளிர் அணி! இலங்கைக்கு எதிராக அசத்தல் வெற்றி!
இன்று நடைபெற்ற மகளிர் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியின் வீராங்கனையான ஜார்ஜியா ப்ளிம்மர் அரை சதம் அடித்து அசத்தினார்.
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 போட்டியின் 15-வது போட்டியாக இன்று நடைபெற்ற போட்டியில் நியூஸிலாந்த் மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி, பேட்டிங் களமிறங்கிய இலங்கை அணி வழக்கம் போல தடுமாறிய விளையாடியது. நியூஸி. அணியின் பவுலர்களை சமாளிக்க முடியாமல் இலங்கை மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் தடுமாறினார்கள். இதனால், அணியின் கேப்டனான சாமரி அதபத்து மட்டும் நின்று நிலைத்து விளையாட, அவருடன் எந்த வீராங்கனையும் பார்ட்னர்ஷிப் அமைக்காமல் தடுமாறியே விளையாடினார்கள்.
இலங்கை அணிக்காக தனி ஒரு ஆளாக நின்று ரன் சேர்த்துக் கொண்டிருந்த அதபத்துவும் துரதிஷ்டவசமாக 35 ரன்களில் அமெலியா கெர் பந்து வீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன் பின் எந்த வீராங்கனையும் சரிவர விளையாடாததால் இலங்கை அணி ரன்கள் எடுக்க சிரமம் கண்டது.
இதனால், இலங்கை அணி 20 ஓவருக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்து வீச்சில் அமர்களப்படுத்திய நியூஸிலாந்து மகளிர் அணியின் லீ காஸ்பெரெக் மற்றும் அமெலியா கெர் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து மகளிர் அணி 116 என்ற இலக்கை நோக்கி பேட்டிங் களமிறங்கியது. அதன்படி, தொடக்கத்தில் சற்று நிதானம் காட்டிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகள் போக போக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
அதிலும், ஜார்ஜியா ப்ளிம்மர் அட்டகாசமான விளையாட்டை வெளிப்படுத்தி இலங்கை அணிக்கு சவாலாக அமைந்தார். என்னதான் இலங்கை மகளிர் அணி இறுதி கட்டத்தில் 2 விக்கெட்டுகளை எடுத்தாலும் அது இலங்கை அணிக்கு முற்றிலும் கைகொடுக்கவில்லை. இதனால், நியூஸிலாந்து மகளிர் அணி 17.3 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்து இலக்கை அடைந்தது.
நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜார்ஜியா ப்ளிம்மர் 53 ரன்களும், அமெலியா கெர் 34 ரன்களும் எடுத்திருந்தனர். அதே போல இலங்கை மகளிர் அணியில் சசினி நிசன்சலா மற்றும் அதபத்து தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றி இருந்தனர்.
இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் நியூஸிலாந்து மகளிர் அணி வெற்றியை பெற்றது. மேலும், 4 புள்ளிகள் எடுத்ததால் அரை இறுதி வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது. இந்தத் தொடரில் ஒரு ஆறுதல் வெற்றி கூட பெறாமல் இலங்கை மகளிர் அணி பெரும் தோல்வியைக் கண்டு தொடரிலிருந்த்தும் வெளியேறி இருக்கிறது.