ரத்தம் சொட்ட சொட்ட மைதானத்தில் இருந்து வெளியேறிய ரச்சின் ரவீந்திரா! ஒருநாள் போட்டியில் விபரீதம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு பந்து பட்டதில் நெற்றியில் ரத்த காயம் ஏற்பட்டது.
![New zealand player Rachin ravindra injured in againt ODI of PAK](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/New-zealand-player-Rachin-ravindra-injured-in-againt-ODI-of-PAK.webp)
லாகூர் : பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 8) லாகூர் கடாபி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இதில், நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 330 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47.5 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 252 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி கண்டது. இந்த போட்டியில் தான் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா ரத்த காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.
பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்ஸ் விளையாடிக் கொண்டிருக்கும் போது 38வது ஓவரில் பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷா அடித்த பந்தில் கேட்ச் பிடிக்க ரச்சின் ரவீந்திரா முயன்றார். இந்த பந்து லைட் வெளிச்சத்தால் நெற்றில் நேராக வந்து மோதியது. இதில் ரத்த காயத்துடன் மைதானத்தில் ஒரு கை ஊன்றி கிழே உட்கார்ந்தார் ரச்சின் ரவீந்திரா. அவர் ரத்த காயம் அடைந்ததை கவனித்ததும் மைதானத்திற்குள் மருத்துவ குழுவினர் வந்தனர்.
பிறகு ரத்தத்தை துண்டு ஒன்று வைத்து துடைத்து கொண்டபடியே மைதானத்தில் இருந்து வெளியேறினார். இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் குழு கூறுகையில், ” ரச்சின் ரவீந்திராவுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மைதானத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்றபடி வேறு எதுவும் இல்லை. அவர் தற்போது நன்றாக இருக்கிறார். அவர் தனது முதல் HIA (தலை காயம் மதிப்பீடு) சிகிச்சையில் உடல் நலம் தேறியுள்ளார். மேலும் HIA செயல்முறைகளின் கீழ் தொடர்ந்து அவர் கண்காணிக்கப்படுவார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rachin Ravindra got injured #PAKvNZ #NZvsPAK #RachinRavindra pic.twitter.com/gHCvVRWs3L
— Utkarrrshhh (@utkarrrshh) February 8, 2025