நியூசிலாந்து 190 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி… தென்னாப்பிரிக்கா முதலிடம்..!
நியூசிலாந்து அணி 35.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை பறிகொடுத்து 167 ரன்கள் எடுத்து 190 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் இன்றைய 32-ஆவது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியும், நியூசிலாந்து அணியும் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, தென்னாபிரிக்கா அணி தொடக்க வீரர்களான களமிறங்கிய குயின்டன் டி காக், கேப்டன் தெம்பா பவுமா களமிறங்கினர்.
இதில், நிதானமாக விளையாடி வந்த கேப்டன் தெம்பா பவுமா 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து ரஸ்ஸி வான் டெர் டுசென் களமிறங்கினார். பின்னர், டி காக், வான் டெர் டுசென் கூட்டணி சேர்ந்து நியூசிலாந்து அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டனர். இவர்களின் விக்கெட்டை பறிக்க முடியாமல் நியூசிலாந்து அணி திணறியது. இதில் அதிரடியாக விளையாடி வந்த குயின்டன் டி காக் 116 பந்துகளில் சதம் விளாசி 10 பவுண்டரி, 3 சிக்ஸர் என மொத்தம் 114 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இவர்களின் கூட்டணியில் 200 ரன்கள் சேர்க்கப்பட்டது.
பின்னர் டேவிட் மில்லர் களமிறங்க ஒருபுறம் ஏற்கனவே அதிரடியாக விளையாடி வந்த ரஸ்ஸி வான் டெர் டுசென் மில்லருடன் சேர்ந்து இன்னும் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். இருப்பினும் ரஸ்ஸி வான் டெர் டுசென் 118 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்ஸர் என மொத்தம் 133 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சவூதி ஓவரில் போல்டனார். களத்தில் இருந்த மில்லர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து 53 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இறுதியாக தென்னாபிரிக்கா அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழந்து 357 ரன்களை குவித்தது.
நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி 2 விக்கெட்டுகளையும், நீஷம் , டிரெண்ட் போல்ட் தலா 1 விக்கெட்டை பறித்தனர். 358 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக வில் யங், டெவான் கான்வே இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய உடனே டெவான் கான்வே 2 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து இறங்கிய ரச்சின் ரவீந்திரன் வந்த வேகத்தில் 9 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபுறம் விளையாடி வந்த தொடக்க வீரர் வில் யங் நிதானமான ஆட்டத்தால் 33 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.
4-வது விக்கெட்டுக்கு இறங்கிய டேரில் மிட்செல் சற்று விளையாடி ரன் சேர்ந்து வந்த நிலையில் அவரும் நிலைத்து நிற்காமல் 24 ரன் எடுத்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் நியூசிலாந்து அணி 90 ரன்னிற்கு 5 விக்கெட்டை பறிகொடுத்தது. பின்னர் இறங்கிய அனைத்து வீரர்களும் பந்து வீச்சை தாக்குபிடிக்கமுடியாமல் சொற்ப ரன்கள் எடுத்து வெளியேறினர். அதன்படி டாம் லாதம் 4 ரன்னும் , மிட்செல் சான்ட்னர் 7 ரன்னும் , டிம் சவுத்தி 7 ரன்னும் எடுத்தும் ஜேம்ஸ் நீஷம் டக் அவுட் ஆகியும் விக்கெட்டை இழந்தனர்.
மத்தியில் இறங்கிய க்ளென் பிலிப்ஸ் மட்டும் சற்று நிலைத்து நின்றுசிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து 60 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இறுதியாக நியூசிலாந்து அணி 35.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை பறிகொடுத்து 167 ரன்கள் எடுத்து 190 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தென்னாப்பிரிக்கா அணியில் கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டையும், ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்டையும் ரபாடா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்கா அணி 7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றியும், 1 தோல்வியையும் தழுவி 12 புள்ளிகளுடன் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி 7 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியும், 3 தோல்வியையும் தழுவி 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.