மகளிர் டி20 உலகக்கோப்பை : ‘புதிய சாம்பியன்’ …வரலாறு படைத்த நியூஸிலாந்து மகளிர் அணி..!
மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் வெற்றிப் பெற்று முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது நியூஸிலாந்து அணி.
துபாய் : நடைபெற்ற வந்த மகளிர் டி20 கோப்பை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. எந்த அணி புதிதாக கோப்பையை வெல்லும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பின் உச்சத்தில் இந்த போட்டியானது இன்று தொடங்கியது. இதில், முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, நியூசிலாந்து மகளிர் அணி பேட்டிங் களமிறங்கி விளையாடியது. அதில் தொடக்க வீராங்கனையான ஜார்ஜியா 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீராங்கனை ஆன சுசி பேட்ஸ் அவரது பங்கிற்கு 32 ரன்கள் விளாசி சிறிது நேரம் விளையாடி ஆட்டமிழந்தார்.
அதன் பின், 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அந்த அணியின் நட்சத்திர வீராங்கனையான அமிலியா கெர் அதிரடியாக விளையாடி 43 ரன்கள் சேர்த்தார். அதைத் தொடர்ந்து, இறுதி கட்டத்தில் களமிறங்கிய ப்ரூக் ஹாலிடே அதிரடியாக விளையாடி அவரது பங்கிற்கு 38 ரன்கள் சேர்த்தார்.
இதனால், நியூசிலாந்து அணியின் ஸ்கோர் அந்த மைதானத்திற்கு சற்று வலுவான ஸ்கோராகவே அமைந்தது. 20 ஓவர்கள் பேட்டிங் செய்த நியூசிலாந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்த்தது. மறுமுனையில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியில் நோன்குலுலேகோ ம்லபா 2 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து, கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் இலக்கை நோக்கி பேட்டிங் களமிறங்கியது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி. அதன்படி, நல்லதொரு தொடக்கத்தையே தென்னாப்பிரிக்க மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் அமைத்தனர். ஆனாலும், துரதிஷ்டவசமாக அணியின் தொடக்க வீராங்கனையும், கேப்டனுமான லாரா 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் யாரும் சரிவர விளையாடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள். நியூசிலாந்து அணியின் கடுமையான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க மகளிர் அணி தட்டி தட்டிய ரண்களை சேர்த்தது. ஆனால் அது தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு போதுமானதாக அமையவில்லை.
இதன் விளைவாக கடைசி ஓவரில் மட்டும் 6 பந்துக்கு 36 ரன்கள் தேவைப்பட்டிருந்தது, இதிலே நியூசிலாந்து அணியின் வெற்றியும் உறுதியானது. இறுதியில், 20 ஓவர்களும் பேட்டிங் பிடித்து 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 126 ரன்களை மட்டுமே தென்னாபிரிக்கா மகளிர் அணி எடுத்தது.
இதனால், 32 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து மகளிர் அணி இந்த போட்டியில் வெற்றிப் பெற்று அசத்தியது. மேலும், கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரை வென்று வரலாற்றில் தங்களது பெயரையும் இடம்பெற செய்துள்ளது. வெற்றி பெற்ற நியூஸிலாந்து மகளிர் அணியின் ரசிகர்கள் மைதானத்தில் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.