ரூ.27 கோடி வேலை செய்யல…ரிஷப் பண்டை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சொதப்பி வருவதன் காரணமாக நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி அவரை 27 ரூபாய் கொடுத்து வாங்கியது மட்டுமின்றி கேப்டன் பொறுப்பையும் ஒப்படைத்தது. கேப்டன் பதவியை அவர் சரியாக பயன்படுத்தி அணியையும் சிறப்பாக வழிநடத்தினார். ஆனால், கவலைக்குறிய விஷயமாக இருப்பது என்னவென்றால் அவருடைய பேட்டிங் தான். ஏனென்றால், இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே தடுமாறி விளையாடி கொண்டு இருக்கிறார்.
உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக 0 (6 பந்துகள்), சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக 15 (15 பந்துகள்), பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 2 (5 பந்துகள்), மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 2 (6 பந்துகள்) என பேட்டிங் செய்ய வந்த வேகத்தில் மீண்டும் பெவிலியன் திரும்பினார். எனவே, அவருடைய பேட்டிங் குறித்து தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்துகொண்டு இருந்தது. இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் தான் இன்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பண்ட் விளையாடினார்.
அணியில் எப்போதும் தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் மிச்செல் மார்ஷ் இல்லை என்பதால் பண்ட் இந்த முறை போட்டியில் ஒபனராக களமிறங்கினார். எனவே, நிச்சியம் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த போட்டியிலும் களமிறங்கியதில் இருந்து திணறிக்கொண்டு தான் பண்ட் விளையாடினார்.
18 பந்துகளை எதிர்கொண்ட அவர் போட்டியில் 4 பவுண்டரி மட்டுமே அடித்து மொத்தமாக 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். “ரூ.27 கோடி செலவழித்து வாங்கிய ரிஷப் பண்ட், ஒரு வடை பாவின் விலையை விடக் குறைவான ரன்களையே எடுத்திருக்கிறார்” என்பது போல மீண்டும் விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள்.