NEDvsBAN: அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்..! பங்களாதேஷ் அணிக்கு 230 ரன்கள் இலக்கு.!
NEDvsBAN: 2023ம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் போட்டியில், ஆஸ்திரேலியா 388 ரன்கள் எடுத்துள்ளது.
இரண்டாவது மற்றும் 28 வது லீக் போட்டியில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நெதர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ’டவுட் நெதர்லாந்தின் சார்பாகத் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள்.
இவர்கள் இருவரும் வந்த வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இதன்பிறகு வெஸ்லி பாரேசி மற்றும் கொலின் அக்கர்மேன் களமிறங்கி விளையாடினார்கள். இதில் வெஸ்லி பாரேசி நிதானமாக விளையாடி அணிக்கு நல்லத் தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தார். இருந்தும் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சில நிமிடத்தில் அக்கர்மேனும் தனது விக்கெட்டை இழந்தார்.
அவரையடுத்து ஸ்காட் எட்வர்ட்ஸ் களமிறங்கி அணியின் ஸ்கோரை உயர்த்த, பாஸ் டி லீடே 17 ரன்களில் களத்தை விட்டு வெளியேறினார். தொடர்ந்து சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் விளையாட மகேதி ஹசன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு பொறுப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஸ்காட் எட்வர்ட்ஸ் அரைசதம் கடந்து, முஸ்தாபிஸூர் வீசிய பந்தில் களத்திருந்து வெளியே சென்றார்.
லோகன் வான் பீக் களமிறங்கி விளையாட, இதன்பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் பெரிதாக சோபிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இறுதியில் நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்கள் எடுத்துள்ளது.
இதில் அதிகபட்சமாக ஸ்காட் எட்வர்ட்ஸ் 68 ரன்களும், வெஸ்லி பாரேசி 41 ரன்களும், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 35 ரன்களும் குவித்துள்ளனர். பங்களாதேஷ் அணியில் ஷோரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், மஹேதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். தற்போது பங்களாதேஷ் அணி 230 ரன்கள் என்ற வெற்றி இலக்கில் களமிறங்க உள்ளது.