பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெற்றி -தொடரை வென்றது இந்திய அணி
வங்கதேச அணியுடன் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வந்தது.இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.இந்த போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களான இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளும்,உமேஷ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.
இதற்கு பின் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 347 ரன்களில் டிக்ளர் செய்தது.இந்திய அணியின் பேட்டிங்கில் விராட் 136 ரன்கள்,புஜாரா 55 ரன்கள் மற்றும் ரகானே 51 ரன்கள் அடித்தார்கள்.
இதனையடுத்து வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது.ஆனால் அந்த அணியில் முஸ்பிகூர் ரஹீமை தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை.இதனால் வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.இறுதியாக வங்கதேச அணி 195 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளும்,உமேஷ் 5 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.இதன் மூலமாக இந்த போட்டியில் இந்திய அணி 46 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.மேலும் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.