ஆரம்பமே அமர்க்களம்… இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கிய இந்திய அணி! 133 ரன்கள் டார்கெட்…
முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்களை கிளீன் போல்ட் செய்துள்ளனர் இந்திய அணி வீரர்கள்.
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடர் இன்றுடன் தொடர்கிறது. இந்த இரு அணிகள் மோதும் முதல் போட்டி இன்று மாலை 7 மணி அளவில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது.
அதன்படி, முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இங்கிலாந்து அணி சார்பில், பென் டக்கெட் மற்றும் பிலிப் சால்ட் ஒப்பனராக களமிறங்கினர். மொத்தத்தில் இங்கிலாந்து அணி 20 ஓவர் ஆட்ட முடிவில் 132 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
சொல்லப்போனால் அந்த அணியில் கேப்டன் ஜோஸ் பட்லர் மட்டுமே அரைசதம் அடித்தார். அந்த அணியின் மற்ற வீரர்கள் 0, 4, 2 என சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து திணறினர். இங்கிலாந்து அணி சார்பாக நிதானமாக பேட்டிங் செய்த கேப்டன் ஜோஸ் பட்லர் அதிக ரன்கள் எடுத்தார். அவர் 44 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் எடுத்தார்.
பந்து வீச்சில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.
இதில், இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டி-20யில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். தற்போது அவர் 61 டி20 போட்டிகளில் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்பொழுது, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வெல்லும் நோக்கத்தில் இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்குகிறது.