இந்தியா – ஆஸ்திரேலியா : 3வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே மழை வந்ததால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ் போட்டியில் இந்திய அணியும், 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றது. இதனால் இரு அணியும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று இந்திய நேரப்படி அதிகாலை 5.50-க்கு பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் தொடங்கியது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான உஸ்மான் கவாஜா மற்றும் நாதன் மெக்ஸ்வீனி ஆகியோர் அவுட்டாகாமல், 13.2 ஓவர்களில் 28 ரன்கள் எடுத்துள்ளனர். அதில், உஸ்மான் கவாஜா 19 ரன்களும் நாதன் மெக்ஸ்வினி 4 ரன் எடுத்து உள்ளனர். இந்த ஆட்டத்தின் நடுவே மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பிரிஸ்பேனில் 5 நாட்கள் மழை பெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்த நிலையில், போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழையின் காரணமாக தற்போது ஆட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி இரண்டு மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, அஸ்வின், ஹர்ஷித் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஜடேஜா, ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்னர்.
இந்திய அணி
ரோஹித் சர்மா தலைமையிலான அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் உள்ளனர்.
ஆஸ்திரேலியா அணி
பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணியில், உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் உள்ளனர்.
ஒருவேளை இந்த போட்டியானது மழையின் காரணமாக முழுதாக நடத்த முடியாமல் போனால் இந்திய அணியின் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கனவு கேள்விக்குறியாகிவிடும். எனவே இந்த போட்டி மட்டுமல்லாது இனி வரும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறது.