“நான் இதை பண்ணுவேன் என்று அணிக்கு முன்னரே தெரியும்” – இஷான் கிஷான் …!
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் நான் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பேன் என்று அணிக்கு முன்னரே தெரியும் என்று இஷான் கிஷான் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில்,நேற்று இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் நடைபெற்றது.
இலங்கை அணி:
முதலில் களமிறங்கிய இலங்கை அணியினர் இறுதியாக 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் எடுத்தனர்.இதில்,இந்திய அணியில், சாஹல், தீபக் சஹர்,குல்தீப் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, குருனால் பாண்டியா தலா ஒரு விக்கெட்டை பறித்தனர். இந்திய அணிக்கு 263 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பிருத்வி ஷாவின் அதிரடி ஆட்டம்:
இதனையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரராக பிருத்வி ஷா, தவான் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே பிருத்வி ஷா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் தவான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பிருத்வி ஷா 26 பந்தில் 43 ரன்கள் குவித்தார்.அதில் 9 பவுண்டரி அடங்கும். பின்னர் களமிறங்கிய இஷான் கிஷான்,தவானுடன் கூட்டணி அமைத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இருவருமே அரை சதம் எடுத்தனர்.
முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த முதல் வீரர்:
அதிரடியாக விளையாடிய இஷான் கிஷான் 2 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 59 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.2001 ஆண்டுக்குப் பிறகு அறிமுக ஆட்டத்தில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை இஷான் கிஷான் பெற்றுள்ளார்.
பின்னர் களமிறங்கிய மனிஷ் பாண்டே வந்த வேகத்தில் 26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.அவரை தொடர்ந்து,சூரியகுமார் யாதவ் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடி வந்த ஷிகர் தவான் அதிரடி காட்ட இறுதியாக இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 263 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.கடைசிவரை களத்தில் தவான் 86* , சூரியகுமார் யாதவ் 31* ரன்கள் எடுத்து களத்தில் நின்றனர்.
இஷான் கிஷான் அறிவிப்பு:
இந்நிலையில்,இது தொடர்பாக பேசிய இஷான் கிஷான்,”முதல் பந்திலேயே நான் சிக்ஸர் அடிப்பேன் என இந்திய அணியின் ஓய்வறையில் இருந்த அனைவரிடமும் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.இதனால்,போட்டியில் எந்த பந்துவீச்சாளராக இருந்தாலும் நான் சிக்ஸர் அடிக்க தயாராக இருந்தேன் என்று அனைவருக்கும் தெரியும்.
டிராவிட் ஆலோசனை:
என்னுடைய பிறந்த நாள்,நல்ல ஆடுகளம்,மேலும்,என்னுடைய முதல் ஒருநாள் ஆட்டம் என எல்லாமே எனக்குச் சாதகமாக இருந்தன.எனவே, நன்றாக விளையாடி அணிக்கு வெற்றியை அளிக்க விரும்பினேன். பயிற்சியின்போதே நான் 3 வது நபராக களமிறங்குவேன் என டிராவிட் ஆலோசனை கூறியிருந்தார். அதன்படியே நானும் மூன்றாவதாக களமிறங்கி எனது அதிரடியை வெளிப்படுத்தினேன்.இது போட்டியின் போது நாங்கள் முடிவு செய்த ஒன்று அல்ல, அது முன்பே முடிவு செய்யப்பட்டது”, என்று தெரிவித்தார்.
கிஷான் ஒரு இடது கை பேட்ஸ்மேன்.மேலும்,இவர் 2016 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.2016–17 ஆம் ஆண்டிற்கான ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்கு எதிராக ஜார்கண்ட் அணி சார்பில் ஆறு போட்டிகளில் மொத்தம் 484 ரன்கள் எடுத்தார்.மேலும்,2016 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை அணியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.