ரொம்ப பிடிச்ச மைதானம்..அதான் காந்தாராவாக மாறிட்டேன்! கே.எல்.ராகுல் ஸ்பீச்!
எனக்கு எப்போதுமே பெங்களூர் மைதானம் மிகவும் பிடித்த மைதானம் என கே.எல்.ராகுல் மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில் களமிறங்கிய RCB அணி 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை டெல்லி அணி 18வது ஓவரில் சேஸ் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணமே கே.எல்.ராகுலின் அதிரடி ஆட்டம் தான். கடைசி வரை களத்தில் நின்று 93* ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார். சிறப்பாக விளையாடி முடித்து சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெற வைத்ததை தொடர்ந்து தனது பேட்டை கீழே சுற்றி இது இன்னுடைய மைதானம் என்பது போல செய்கை காட்டி வெற்றியை கே.எல்.ராகுல் கொண்டாடினார். அவர் கொண்டாடிய விதம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. ரசிகர்கள் பலரும் காந்தாரா படத்தில் வரும் காட்சிகளை வைத்தும் கே.எல்.ராகுல் கொண்டாடிய காட்சிகளை வைத்தும் எடிட் செய்து வருகிறார்கள்.
இந்த சூழலில், போட்டி முடிந்தபிறகும் தான் காந்தாரா படத்தில் வரும் காட்சியை வைத்து தான் கொண்டாடினேன் என கே.எல்.ராகுல் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு எப்போதுமே பெங்களூர் மைதானம் மிகவும் பிடித்த மைதானம். இங்குதான் நான் எனது ஐபிஎல் பயணத்தை ஆரம்பித்தேன், இங்கு விளையாடுவது எப்போதும் எனக்கு வீடு திரும்புவது போல உணர்வைத் தருகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
போட்டியில் நான் அந்த மகிழ்ச்சியுடன் விளையாடிய காரணத்தால் எனக்கு பிடித்த காந்தாரா படத்தில் இடம்பெற்ற கொண்டாடட்டதை வைத்து கொண்டாடினேன்” எனவும் கே.எல்.ராகுல் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ” நிலைமையைப் பொறுத்து விளையாட வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் பந்து சற்று ஒட்டிக்கொண்டிருந்தது, ஆனால் பின்னர் அதிரடியாக விளையாடினாள் தான் ஆட்டத்தை மாற்றமுடியும் என நினைத்து அதிரடியாக விளையாடினேன்” எனவும் கே.எல்.ராகுல் தெரிவித்தார்.