முரளி விஜய், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பு.!
இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான முரளி விஜய், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரரான தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 38 வயதான மூத்த இந்திய வீரரான முரளி விஜய், இந்திய அணிக்காக 2002 முதல் அறிமுகமாகி கிரிக்கெட் விளையாடி வருகிறார். அவர் 61 டெஸ்ட்களில் விளையாடி 12 சதம், 15 அரை சதங்களுடன் 3982 ரன்கள்(சராசரி- 38.28) குவித்துள்ளார். 17 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர், 339 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் இலும் சென்னை அணிக்காக விளையாடியுள்ள முரளி விஜய், தனது முத்திரை பதித்திருக்கிறார். ஐபிஎல்லில் 106 போட்டிகளில், இரண்டு சதங்கள் உட்பட 121.87 ஸ்ட்ரைக் ரேட்டில் மொத்தம் 2619 ரன்கள் குவித்துள்ளார்.
இந்திய அணியின் டெஸ்ட் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வந்த விஜய், 2018க்கு பிறகு மோசமான ஆட்டத்திற்கு பிறகு இந்திய அணியில், நிரந்தர இடம் கிடைக்காமல் அவ்வப்போது ஓரங்கட்டப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து முரளி விஜய், இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். விஜய் தனது ட்வீட்டில், இந்தியாவிற்கு விளையாடும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி கூறி, தனக்கு ஆதரவளித்த அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் இந்திய அணி தனது வரும்காலங்களில் சிறந்து செயல்பட வாழ்த்துகள் கூறி, தான் வாழ்க்கையின் அடுத்த நகர்வை நோக்கி பயணிக்க உள்ளதாக மேலும் தெரிவித்தார்.
@BCCI @TNCACricket @IPL @ChennaiIPL pic.twitter.com/ri8CCPzzWK
— Murali Vijay (@mvj888) January 30, 2023