MI vs KKR : சொந்த மண்ணில் கெத்தாக முதல் வெற்றியை ருசித்த மும்பை! கொல்கத்தா படுதோல்வி!

12.5 ஓவரில் 121 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.

MI vs KKR - IPL 2025 (1)

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இம்பேக்ட் பிளேயராக ரோஹித் சர்மா வெளியிலும், அஸ்வனி குமார் எனும் வீரர் இந்த போட்டியில் மும்பை அணியில் அறிமுகமும் செய்யப்பட்டார்.

முதல் இன்னிங்க்ஸ் கொல்கத்தா வுக்கு மோசமான தொடக்கமாகவே அமைந்தது. மும்பை வீரர்களின் பந்துவீச்சை பவர் பிளேயில் கூட சமாளிக்க முடியாத அளவுக்கு மளமளவென4 விக்கெட்டுகள் சரிந்தன. தொடக்க வீரர்களான குயின்டன் டி காக் 1 ரன்னிலும், சுனில் நரைன் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர்.

கேப்டன் அஜிங்க்யா ரஹானே 11 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களும், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி அதிகபட்சமாக 26 ரன்களும் எடுத்து அவுட் ஆகினார். ரின்கு சிங் 17 ரன்களும், மணீஷ் பாண்டே (இம்பேக்ட் பிளேயர்) 19 ரன்களும், ஆண்ட்ரே ரசல் 5 ரன்களும், ஹர்ஷித் ராணா 4 ரன்களும், ரமன்தீப் சிங் 22 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.

இதனால் 16.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து கொல்கத்தா அணி 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில்  கொல்கத்தா அணியை ஆட்டம் காண வைத்தது முதல் முறையாக ஐபிஎல் போட்டிக்கு அறிமுகம் செய்யப்பட்ட அஸ்வனி குமார் தான். அவர் 3 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி மிரட்டினார். தீபக் சாகர் 2 விக்கெட்களையும், ஹர்திக் பாண்டியா, விக்னேஷ் புதுர், டிரெண்ட் போல்ட் , மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

20 ஓவரில் 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. 117 ரன்கள் என பொறுமையாக விளையாடாமல் ஆரம்பம் முதலே அடிக்க ஆரம்பித்துவிட்டனர். இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய ரோஹித், 6வது ஓவரில் 13 ரன்னில் ரசல் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். அடுத்து 11வது ஓவரில் ரசல் பந்துவீச்சில் வில் ஜேக்ஸ் 16 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார்.

மறுபுறம் சீக்கிரம் மேட்ச் முடித்து வீட்டுக்கு செல்வோம் என்ற மூடில் ரியான் ரிக்கல்டன் அதிரடியாக விளையாடினார். அவர் 40 பந்தில் 61 ரன்கள் விளாசினார். சூர்யகுமார் யாதவ் 9 பந்தில் 27 ரன்கள் விளாசி மும்பை அணியின் முதல் வெற்றியை பதிவு செய்தார். 12.5 ஓவரில் 121 ரன்கள் எடுத்து மும்பை அணி தனது சொந்த மண்ணில் கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்