பந்து வீச்சில் மிரட்டிய ராஜஸ்தான்… 125 ரன்களுக்கு சுருண்ட மும்பை..!
ஐபிஎல் 2024 : தற்போது நடைபெற்று வரும் போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை பறிகொடுத்து வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
இன்றைய போட்டியில் மும்பை அணியும், ராஜஸ்தான் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் என்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்கியது. மும்பை அணிக்கு ஆட்டம் தொடக்கமே சிறப்பாக அமையவில்லை, காரணம் டிரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரில் மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, நமன் திர் இருவரும் அடுத்தடுத்த பந்தில் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
அடுத்து, இஷான் கிஷன், டெவால்ட் ப்ரீவிஸ் இருவரும் களமிறங்க டெவால்ட் வந்த முதல் பந்திலே டக் அவுட் ஆகினார். இருப்பினும் இஷான் கிஷன் 14 பந்தில் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரி என 14 ரன்கள் எடுத்து சஞ்சு சாம்சனிடம் விக்கெட்டை பறி கொடுத்தார். இதனால் மும்பை அணி 20 ரன்னிற்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இருப்பினும் மத்தியில் களம் இறங்கிய திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா இருவரும் சற்று நிதானமாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர். ஹர்திக் பாண்டியா, சாஹல் ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்ற போது பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த ரோவ்மேன் பவலிடம் கேட்ச் கொடுத்து ஹர்திக் பாண்டியா 34 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்த சில நிமிடங்களே எதிர்முனையில் இருந்த திலக் வர்மா அஸ்வினிடம் கேட்ச்கொடுத்து வெளியேறினார். கடைசியில் இறங்கிய ஜெரால்ட் கோட்ஸி 4, பியூஷ் சாவ்லா 3 , டிம் டேவிட் 17 ரன்கள் எடுக்க இறுதியாக மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை பறிகொடுத்து வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் டிரெண்ட் போல்ட், சாஹல் தலா 3 விக்கெட்டையும், நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டையும், அவேஷ் கான் ஒரு விக்கெட் பறித்தனர்.