MI vs KKR : சொந்த ஊரில் மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டி! கொல்கத்தாவுக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு!
ஐபிஎல் 2025-ல் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின் வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் தனது சொந்த மைதானத்தில் விளையாடும் முதல் போட்டியாகும். இன்று இந்த சீசனில் அவர்களுக்கு முதல் வெற்றியைப் பெறுவதற்கான முக்கிய வாய்ப்பாக அமையுமா என்பதை பார்க்கலாம்.
மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் சென்னையில் தோல்வியடைந்தனர், பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் அகமதாபாத்தில் தோல்வியை சந்தித்தனர். தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளனர்.
ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, ரியான் ரிக்கெல்டன் ஆகியோர் இருந்தும் அந்த அணி பேட்டிங்கில் போராடி வருகிறது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா இல்லாததும் அவர்களை பலவீனப்படுத்தியுள்ளது. அதனால் தங்கள் சொந்த மைதானத்தில் முதல் போட்டியில் வெற்றி பெற்று தங்கள் வெற்றிக் கணக்கை தொடங்குமா என்பதை பார்க்கலாம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் தோல்வியடைந்தாலும், அதன் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று தங்கள் வெற்றிக் கணக்கை தொடங்கி உள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளனர். ரஹானே தலைமையிலான இந்த அணி, சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் சுழற்பந்து வீச்சையும், ரிங்கு சிங் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோரின் அதிரடி பேட்டிங்கையும் பலமாகக் கொண்டுள்ளது.
இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியாஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால் முதலில் பேட்டிங் களம் காண கொல்கத்தா வீரர்கள் தயாராகி வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் :
ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ட்ரெண்ட் போல்ட், அஸ்வனி குமார், விக்னேஷ் புதூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :
குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே(கேப்டன்), ரின்கு சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.