மும்பைக்கு கிடைத்த புது ஹீரோ! யார் இந்த ‘ஆட்ட நாயகன்’ அஸ்வினி குமார்?

கொல்கத்தாவுக்கு எதிரான அறிமுக போட்டியில் மும்பை வேக பந்துவீச்சாளர் அஸ்வினி குமார் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

ashwani kumar

மும்பை :  எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை இந்தியன்ஸ் ஏற்படுத்துவார்கள் என்று சொல்லலாம். இப்போது பெரிய வீரர்களாக இருக்கும் ஹர்திக், க்ருனால், உள்ளிட்ட பலரையும் அப்படி தான் வளர்த்துவிட்டார்கள். அந்த வரிசையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு புதிய ஹீரோ கிடைத்திருக்கிறார் என்று சொன்னால், அது ‘ஆட்ட நாயகன்’ அஸ்வினி குமார் தான்.

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 23 வயது இளம் வீரர், தனது முதல் போட்டியிலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் தனது அறிமுக ஆட்டத்திலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்தார். அவர் வீசிய முதல் பந்திலேயே அவருக்கு விக்கெட்டும் கிடைத்ததது. இந்நிலையில், யார் இந்த அஸ்வனி குமார்? அவரது பின்னணி, பயணம் மற்றும் இந்த சாதனை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

அஸ்வினி குமாரின் பின்னணி

அஸ்வினி குமார், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலி அருகே ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். எளிய குடும்பத்தில் பிறந்த இவர், கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் சிறு வயதிலிருந்தே கடின உழைப்பை மேற்கொண்டு வந்தார். “நான் மொஹாலி அருகே ஒரு கிராமத்திலிருந்து வருபவன். இந்த நிலைக்கு வருவதற்கு மிகுந்த கடின உழைப்பும், கடவுளின் அருளும் துணை நின்றிருக்கிறது,” என்று அவர் தனது முதல் ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற பிறகு உணர்ச்சி பொங்க பேசினார்.

அஸ்வினி குமார் கிரிக்கெட்டை முதன் முதலில் தொடங்கியது தனது கிராமத்தில் நண்பர்களுடன் தெருக்களில் விளையாடியபோது. அப்போது அவருக்கு சரியான உபகரணங்கள் கூட இல்லை. பழைய மர பேட்டையும், ரப்பர் பந்தையும் வைத்து விளையாடினார். ஆனால், அவரது இயல்பான திறமை அப்போதே தெரிந்தது. “நான் சிறு வயதில் பந்து வீசுவதை விரும்பினேன். என் நண்பர்களால் என் பந்தை அடிக்க முடியாதபோது, அதில் ஒரு தனி சந்தோஷம் கிடைத்தது,” என்று அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

அறிமுகம் 

பள்ளிக்கூடம் படிக்கும் போது அவர் மாவட்ட அளவில் விளையாடியபோது, அவரது வேகமும், பந்தை ஸ்விங் செய்யும் திறனும் கவனத்தை ஈர்த்தன. 15 வயதில், பஞ்சாப் அண்டர்-19 அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால், இந்த பயணம் சவால்கள் இல்லாமல் இருக்கவில்லை. பயிற்சிக்கு செல்ல பணம் இல்லாததால், சில நேரங்களில் நண்பர்களிடம் கடன் வாங்கியும், பேருந்தில் பயணித்தும் அவர் மைதானத்திற்கு சென்றார்.

அதன்பிறகு 2022 ஆம் ஆண்டு, அவர் முதல் முறையாக ரஞ்சி டிராபியில் அறிமுகமானார். அங்கு, தனது முதல் சீசனிலேயே 20 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது திறமையை நிரூபித்தார். ரஞ்சி டிராபியைத் தொடர்ந்து, உள்ளூர் டி20 போட்டிகளிலும் அஸ்வனி பங்கேற்றார். அங்கு அவரது எக்ஸ்பிரஸ் வேகம் மற்றும் யார்க்கர் பந்துகள் பேட்ஸ்மேன்களுக்கு தலைவலியையும் ஏற்படுத்தியது. இந்த சீரான செயல்பாடு, ஐபிஎல் அணிகளின் ஸ்கவுட்டுகளின் கவனத்தை ஈர்த்தது.

அதனை தொடர்ந்து தற்போது ஐபிஎல் போட்டிகளில் அறிமுகம் ஆகி கலக்கி இருக்கிறார். அஸ்வனி குமாரின் இந்த அறிமுக ஆட்டம், அவரது கிரிக்கெட் பயணத்தில் ஒரு தொடக்கம் மட்டுமே. இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கும் திறமை அவரிடம் இருப்பதாக பல விமர்சகர்கள் கருதுகின்றனர். மும்பை இந்தியன்ஸ் போன்ற ஒரு பெரிய அணியில் தனது திறமையை நிரூபித்திருக்கும் அஸ்வனி, இனி வரும் போட்டிகளிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு வரிசையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்