“இந்த ரன்கள் அவருக்கு போதாது”.., விராட் கோலி குறித்து மனம் திறந்த எம்.எஸ்.தோனி!
விராட் கோலி எப்போதும் இறுதி வரை விக்கெட் இழக்காமல் நிலைத்து ஆட வேண்டும் என்று நினைப்பார் என்று எம்.எஸ்.தோனி பேசிருக்கிறார்.

சென்னை : நேற்று தினம் (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணியும் மோதியது. இதில், மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது.
இந்த போட்டி முடிந்த பின், ஜியோ ஹாட் ஸ்டாரில் “The MSD Experience” நிகழ்ச்சியில் பேசிய தோனியிடம் விராட் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, “விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே என்னுடன் விளையாடியுள்ளார். விராட் கோலி அணியின் வெற்றிக்கு எப்போதும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். 50-60 ரன்கள் அவருக்கு போதாது.
எப்போதும் சதம் அடிக்க வேண்டும். அணியின் வெற்றிக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றே இருப்பார். இறுதி வரை விக்கெட் இழக்காமல் நிலைத்து ஆட வேண்டும் என்று நினைப்பார். அவர் அவ்வப்போது என்னிடம் வந்து, ‘வேறு ஏதாவது வித்தியாசமாகச் செய்ய விரும்புகிறீர்களா?’ என்று கேட்பார்.
நான் எப்போதும் என் நேர்மையான கருத்தைத் தெரிவிப்பேன். அதனால்தான் எங்களுக்குள் பிணைப்பு வளர்ந்தது, நாம் பல விஷயங்களைப் பற்றிப் பேசுவோம். தற்போது இருவரும் கேப்டன் இல்லை, எனவே போட்டிகளுக்கு முன் நீண்ட நேரம் பேச முடிகிறது. இன்னும் எங்களுக்கிடையில் ஒரு கோடு இருப்பதாக நான் நினைக்கிறேன். ஒரு மூத்த மற்றும் இளைய வீரருக்குள் இருக்கும் மரியாதையும் நட்பும் எங்களுக்குள் உள்ளது. ஆனால், நாங்கள் இன்னும் நண்பர்களாகவே இருக்கிறோம் என்று தோனி கூறினார்.
தொடர்ந்து ருத்ராஜ் பற்றி பேசிய தோனி, போட்டி தொடங்குவதற்கு முன்பே நான் ருத்ராஜிடம் நேரடியாகச் சொன்னேன். நான் என்ன அறிவுரை கூறினாலும், அதைப் பின்பற்ற வேண்டியதில்லை. நான் ருத்ராஜ் பின்னால் இருந்து முடிவுகளை எடுப்பேன் என்று பலர் நினைக்கிறார்கள்.
உண்மை என்னவென்றால், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற 99 சதவீத முடிவுகளை ருதுராஜ் தான் எடுக்கிறார், அவர் எடுப்பது தான் இறுதி முடிவு. நான் என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன் அவ்வளவு தான். அது மட்டும் இல்லாமல், வீரர்களைக் கையாள்வதில் அவர் சிறப்பாகச் செயல்படுகிறார்,” என்று தோனி கருத்து தெரிவித்தார்.