எப்போதுமே சேஸிங் மன்னன் எம்.எஸ்.தோனி தான்..! கெவின் பீட்டர்சன் புகழாரம்..!

சேஸிங் மன்னன் எம்.எஸ்.தோனி என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்து, பெங்களூரு அணிக்கு 201 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் எடுத்தது. அதற்குள் ஃபாஃப் டு பிளெசிஸ் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். விராட் கோலி 54 ரன்கள் எடுத்த அரைசதம் விளாசிய நிலையில் வெங்கடேஷ் ஐயர் அசத்தலான கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். இறுதியில் ஆர்சிபி 179/8 ரன் எடுத்து கேகேஆரிடம் தோல்வியைத் தழுவியது.
இதையடுத்து இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் ஆர்சிபி அணியின் இந்த ஆட்டத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நீங்கள் 200 ரன்களுக்கு மேல் அடிக்க (சேஸ்) வேண்டிய தேவை இருக்கும் போது, ஆட்டத்தை இறுதிவரை கொண்டு செல்ல வேண்டும். இதனை சேஸிங் மன்னன் எம்.எஸ்.தோனி பலமுறை செய்தும் காட்டியுள்ளார் என்று கூறினார்.
மேலும், தோனி இத்தகைய சூழலில் எப்போதுமே ஆட்டத்தை 18வது ஓவர், 19வது ஓவர், 20வது ஓவர் என இறுதிவரை எடுத்து செல்லுமாறு கூறுவார். பெரிய இலக்குகளை சேஸ் செய்யும்பொழுது எம்.எஸ்.தோனியை, மற்ற அணிகளின் பேட்ஸ்மேன்கள் பின்பற்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.