நான் வீல்சேரில் இருந்தால் கூட CSK-வுக்காக விளையாடுவேன்! M.S.தோனி நெகிழ்ச்சி!
நான் விரும்பும் வரை சிஎஸ்கேவில் விளையாடுவேன். வீல்சேரில் இருந்தால் கூட அழைத்து வருவார்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

சென்னை : கிரிக்கெட் உலகில் சில வீரர்களுக்கு அணி என்பது வெறும் விளையாட்டுகானது மட்டுமல்ல. சிலருக்கு அது ஒரு குடும்பம் போன்றது. அப்படியொரு பிணைப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் கொண்டுள்ளார் எம்.எஸ்.தோனி. அவர், தனது அணியின் மீது அளவுகடந்த அன்பை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு சற்றும் குறைவில்லாமல் ரசிகர்கள் அவர் மீது அதீத அன்பை வெளிக்காட்டி வருகின்றனர்.
இன்று ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ளன. இதற்கான நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இரு அணி வீரர்களும் கலந்துரையாடினர்.
அப்போது , சென்னை அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகிந்திர சிங் தோனியிடம் வழக்கம் போல இன்னும் எத்தனை ஐபிஎல் போட்டிகள் விளையாடுவார்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பேசுகையில், ” நான் விரும்பும் வரை சிஎஸ்கேவில் நான் விளையாடலாம். இது என்னுடைய அணி. நான் சக்கர நாற்காலியில் இருந்தாலும் கூட, அவர்கள் என்னை இழுத்து வந்து விளையாட வைப்பார்கள்” என்று சிரித்தபடியே கூறினார். தோனி கூறிய இந்த வார்த்தை ரசிகர்களின் இதயங்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தோனியும் சிஎஸ்கேவும் :
2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற எம்.எஸ். தோனிக்கு சென்னை அவரது இரண்டாவது வீடு என சொல்லும் அளவுக்கு நெருக்கமாகி போனார். சென்னை அணிக்காக ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம், எண்ணற்ற வெற்றிகள், மறக்க முடியாத தருணங்கள் பலவற்றை தோனி தனது ரசிகர்களுக்கு அளித்துள்ளார். இந்த வெற்றிகளைத் தாண்டி, அவருக்கும் அணிக்கும் இடையே உள்ள உணர்வுபூர்வமான தொடர்பு தான் அவரை “தல” என்று ரசிகர்கள் அழைக்கக் காரணமாக அமைந்தது.
“நான் சக்கர நாற்காலியில் இருந்தாலும் கூட, அவர்கள் என்னை இழுத்து வந்துவிடுவார்கள்,” என்று சிரித்தபடி தோனி சொன்னது, அவரது நகைச்சுவை உணர்வை மட்டுமல்ல, சிஎஸ்கே அணியுடனான அவரது ஆழமான பிணைப்பையும் வெளிப்படுத்துகிறது. இது ஒரு நகைச்சுவையாக இருக்கலாம், ஆனால் அதன் பின்னால் உள்ள உண்மை ரசிகர்களை நெகிழ வைக்கிறது. வயது ஏற ஏற, தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பும் இந்த தருணத்தில், அவர் தனது அணியுடனான நிரந்தரமான உறவை இப்படி உறுதிப்படுத்தியிருக்கிறார்.