இந்திய அணி 2019 உலகக்கோப்பைக்குத் தயார் ஆகும் நிலையில் பல்வேறு சோதனை முயற்சிகளில் இறங்கியுள்ளது, இதில் ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன்சி சமீபகாலமாக விதந்தோதப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அணியின் முக்கிய வீரர், 5ம் நிலை அவருக்கே என்று பலரும் சூசகமாகப் பேசி வரும் தோனியின் பேட்டிங் பார்ம் பெரிய கவலைக்குரியதாக மாறி வருகிறது.
2015 உலகக்கோப்பைக்குப் பிறகே பினிஷர் தோனியின் பேட்டிங் கடும் சரிவு கண்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தோனி 42 இன்னிங்ஸ்களில் 1291 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 39. இந்த 1291 ரன்களில் 788 ரன்கள் 2017-ம் ஆண்டு பலவீனமான மே.இ.தீவுகள், இலங்கை அணிக்கு எதிராக வந்தது.
2018-ம் ஆண்டைப் பார்த்தோமானால் இன்னும் ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை, 10 இன்னிங்ஸ்களில் அவரது தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 42 ரன்கள் மட்டுமே. இந்த ஆண்டில் அவரது சராசரி 28.13, ஸ்ட்ரைக் ரேட் படுமோசமான 67.37.
அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் உலகக்கோப்பை நடக்கிறது. இங்கிலாந்தில் சமீபத்தில் முடிந்த ஒருநாள் தொடரில் தோனி 79 ரன்களைத்தான் மொத்தமாக எடுத்தார். 2 இன்னிங்ஸ்களில்தான் ஆடினார், அதில் 79 ரன்கள். ஆனால் ஸ்ட்ரைக் ரேட் 63% தான். இதில் 2வது ஒருநாள் போட்டியில் 59 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ரசிகர்களின் கோபாவேசத்திற்கு ஆளானார்.
இங்கிலாந்தில் அனைத்தும் பேட்டிங் பிட்ச், 300 என்பது அன்றாடம், 400 என்பது அதிசாத்தியம் இந்நிலையில் அதிக ஸ்ட்ரோக்குகள் கைவசம் இல்லாத தோனி கவைக்குதவுவாரா என்பதே இப்போதைய கேள்வி.
சரி அது இங்கிலாந்து. இப்போது ஆசியக் கோப்பையில் பார்த்தால் 77 ரன்களை 19.25 என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் இன்னும் இறங்கி 62%. இதில் ஆப்கானுக்கு எதிராக பினிஷர் முடிப்பார் என்று பார்த்தால் டை ஆகி வரலாறானது.
எனவே தோனி மீதான கேள்விகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மீண்டும் தோனி தனது ஹெலிகாப்டர் சிக்சர்களுடன் புகழின் உச்சிக்கு மீண்டும் செல்வாரா என்பதே ரசிகர்களின் பெரிய ஆர்வமாக உள்ளது.
DINASUVADU