ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள்.. அதிரடி காட்டிய குஜராத்..! சென்னை அணிக்கு இமாலய இலக்கு..!
ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில், முதலில் பேட் செய்த குஜராத் அணி 214/4 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் 2023 தொடர் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், பிளேஆப் சுற்று போட்டிகள் முடிவடைந்து இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த இறுதி போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, குஜராத் அணியில் முதலில் களமிறங்கிய விருத்திமான் சாஹா, சுப்மன் கில் ஜோடி அதிரடியாக விளையாடி அணிக்கு நல்லத்தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர். ஒருபுறம் சுப்மன் கில் ஆட்டமிழக்க, சாய் சுதர்சன் களமிறங்கி பொறுப்பாக விளையாடினார்.
இதன்பின், பொறுப்பாக விளையாடிய விருத்திமான் சாஹா அரைசதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா களமிறங்க, சாய் சுதர்சன் சிக்ஸர்கள், பவுண்டரிகளை பறக்கவிட்டு அரைசதம் அடித்தார். இருந்தும் சதம் அடிக்கும் வேலையில் 96 ரன்களுக்கு களத்தை விட்டு வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய ரஷித் கான் வந்த வேகத்தில் வெளியேறினார்.
முடிவில், குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 96 ரன்களும், விருத்திமான் சாஹா 54 ரன்களும், சுப்மன் கில் 39 ரன்களும், ஹர்திக் பாண்டியா 21* ரன்களும் குவித்தனர். சென்னை அணியில் மதீஷ பத்திரன 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், குஜராத் அணி 214 ரன்கள் குவித்து, இதுவரை ஐபிஎல் வரலாற்றில் இறுதி போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.