நாயகன் மீண்டும் வரார்… இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கம்பேக் கொடுக்கும் முகமது ஷமி!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்தியா அணியில் இடம்பெறவில்லை. அதன்பிறகு, உள்ளூர் போட்டிகளில் விளையாடிய போதிலும், இந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் இந்தியாவுக்காக இன்னும் விளையாடவில்லை.
ஆனால் சமீபத்திய தகவல்களின்படி, அடுத்து வரவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட முகமது ஷமி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பெரும் காயம் ஏற்பட்டது.
அப்போது, அந்த காயத்திற்காக அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக, ஷமியின் முழங்காலில் ஒரு சிறிய வீக்கம் ஏற்பட்டது. இதனால், அவதியடைந்த அவரால், சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் கூட அவரால் விளையாடமுடியவில்லை.
தற்போது, ஷமி சையத் முஷ்டாக் அலி டிராபி மற்றும் விஜய் ஹசாரே டிராபி போன்ற போட்டிகளில் அவர் தொடர்ந்து பங்கேற்பது, அவரது முழு உடற்தகுதியை மீண்டும் வெளிகாட்டுகிறது. இந்த நிலையில், முகமது ஷமி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, வரவிருக்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான தொடர்களான ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த இரு அணிகளும் மோதும் ஐந்து டி20 போட்டிகள் ஜனவரி 22, 25, 28, 31 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இந்த போட்டிகள் கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட், புனே, மும்பை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. மேலும், மூன்று ஒருநாள் போட்டிகள் பிப்ரவரி 6, 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நாக்பூர், கட்டாக் மற்றும் அகமதாபாத்தில் நடைபெறும்.
இந்த போட்டிகளில் ஷமி மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த செய்தி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடருக்கான தற்காலிக பட்டியலை வரும் 12ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.